Abstract:
இலங்கைத்தீவின் வடபாலமைந்துள்ள யாழ்ப்பாணத்திற்கென தனித்துவமான இந்துப் பண்பாட்டுப் பாரம்பரியம் காணப்படுகின்றது. ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்குக் குறையாத இந்துப்பண்பாட்டு வரலாறு அதற்குள்ளதை தொல்லியல் சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. பெருங்கற்பண்பாட்டுக் காலத்திலிருந்தே யாழ்ப்பாணத்தின் முன்னோடிச் சமயமான இந்து சமயம் (Proto Hinduism) வளர்ச்சி பெற்று வந்துள்ளமையை காணமுடிகின்றது. ஆயினும் கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இந்துசமயத்தோடு தொடர்புபட்டிருந்த கோயில்களையும் அவற்றின் எச்சங்களையும் இன்று அடையாளம் காண்பது சிரமமானதாகும். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை கதிரைமலையை மையமாகக் கொண்ட உக்கிரசிங்கன் கதை (கதிரையாண்டார் கோயில்) மற்றும் மாருதப்புரவீகவல்லி கதை (மாவட்டபுரம் கந்தசுவாமி கோயில்), நகுலமுனிவரின் கதை (நகுலேஸ்வரம்) போன்றன இந்துக்கோயில்களின் உருவாக்கத்தோடு தொடர்புபடுத்தப்படுவதைக் யாழ்ப்பாணவரலாற்றோடு தொடர்புடைய இலக்கியச்சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. போத்துக்குகேயரின் ஆட்சியிலும் ஒல்லாந்தரின் ஆட்சியின் முற்பகுதியிலும் யாழ்ப்பாணத்துக்கோயில்கள் பல இடித்தழிக்கப்பட்ட வரலாறு பதியப்பட்டுள்ளது. ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் வழங்கப்பட்ட சமயவழிபாட்டுக்கான அனுமதிக்குப் பின்னர் அமைக்கப்பட்ட கோயில்களே இன்று யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றன. அக்காலத்திலிருந்து இன்றுவரைப் பலகோயில்கள் யாழ்ப்பாணத்தில் காணப்பட்டாலும் அவை பல்வேறு காரணங்களினாலும் 30 ஆண்டுக்கால உள்நாட்டு யுத்தத்தினாலும் அழிக்கப்பட்டும், அழிவடைந்தும் காணப்படுகின்றன. இவற்றுள் பலகோயில்கள் அன்றும் இன்றும் நிர்வாக முரண்பாடுகளினால் நீதிமன்றங்களை நாடிவருவதனை அவதானிக்கமுடிகின்றது. யாழ்ப்பாணத்தில் பிரபல்யம்வாய்ந்த சிலஇந்துக்கோயில்களின் நிர்வாகப்பிரச்சினை தொடர்பான நீதிமன்ற வழக்குகள் பற்றியும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும் ஆராய்வதாகவே இக்கட்டுரை அமைகின்றது. இவ்வாய்வானது விபரண ஆய்வுமுறையியலை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்கட்டுரைக்கான தரவுகள் இந்துசாதனப்பத்திரிகை மற்றும் நீதிமன்றப் பதிவேடுகள் என்பனவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டவை என்பதுகுறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்து இந்துசமுதாயம் இன்றுபல்வேறு சவால்களை எதிர்கொண்டே பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டிய நிலையிலுள்ளது. சமூகத்தை நல்வழிப்படுத்தக் கூடிய கோயில்களால் அதனைச் செய்யமுடியவில்லை. இதற்கு அவற்றில் காணப்படும் நிர்வாகப் பிரச்சனைகளே பிரதான காரணமென்பதை எடுத்தக்காட்டுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.