Abstract:
இலங்கைத்தமிழர் வரலாறு பற்றிய நீண்ட தொடர்ச்சியான வரலாற்று எழுத்தியல் இல்லாமையால் தொல்பொருட்சான்றுகளின் அடிப்படையிலேயே தமிழரின் மொழி, பண்பாடு, பாரம்பரியம் போன்ற இன்னோரன்ன விடயங்களை அறியமுற்படும் நிலை காணப்படுகின்றது. இப்பின்னணியில் கல்வெட்டுகள், நாணயங்கள், மண்பாண்டங்கள், கட்டடங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய தொல்லியல் சான்றுகளின் உதவியுடன் இலங்கைத்தமிழர் வரலாறு துலக்கமடையத் தொடங்கியுள்ளது. பாளிஇலக்கியங்களில் தமிழர்வரலாறு பெருமளவுக்குப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் தமிழரின் தொன்மையையும் வரலாற்றையும் அறிந்து கொள்வதற்கு கல்வெட்டு ஆய்வு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிவருகின்றன. இலங்கையைப் பொறுத்தவரையில் முதலில் வெளிநாட்டவர்களான ஐரோப்பியர்களும் பின்னர் இந்திய மற்றும் சிங்கள கல்வெட்டாய்வாளர்களும் சுதேச கல்வெட்டுக்களை ஆராய முயன்றனர். 20ஆம் நூற்றாண்டின் அரைப்பகுதியை தாண்டி ஈழத்து தமிழ்அறிஞர்களும் அப்பணியில் ஈடுபடத்தொடங்கினர். பேராசிரியர் கணபதிப்பிள்ளையை முன்னோடியாகக் கொண்டு பலர் இத்துறையில் கவனம் செலுத்தினர். குறிப்பாகப் பேராசிரியர் வேலுப்பிள்ளையின் பணிகள் தமிழ்க்கல்வெட்டுக்களின் ஆய்வில் முக்கியமான திருப்பமாக அமைந்ததெனலாம். வேலுப்பிள்ளையின் கல்வெட்டு ஆய்வுகளை கண்டறிவதாகவும், தமிழர் வரலாற்றுக்கு அவர் வழங்கிய பங்களிப்பை மதிப்பீடு செய்வதாகவும் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வறிஞரால் ஆக்கப்பட்டு வெளியிடப்பட்ட கல்வெட்டுத் தொடர்பான நூல்கள், கட்டுரைகள், மற்றும் வெளியீடுகளை முதன்மைத்தரவுகளாகவும், இவ்விடயம் தொடர்பாக வெளியிடப்பட்ட ஆக்கங்களை இரண்டாம் நிலைத்தரவுகளாகவும் கொண்டு பகுப்பாய்வு, விபரண ஆய்வு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.