Abstract:
இலங்கைக்கு மிகவும் அண்மித்தநாடாக இந்தியா காணப்படுவதால் அங்கிருந்து காலத்துக்குக்காலம் பல்வேறு காரணங்களினால் மக்கள்புலப்பெயர்ச்சி, படையெடுப்புக்கள், சமயம், மொழி உள்ளிட்ட பண்பாட்டுச்செல்வாக்குகள் அடிக்கடி ஏற்பட வழியேற்பட்டது. இப்பின்னணியில் இலங்கையில் இந்துசமயமும் அதுசார்ந்தபண்பாடும் முக்கியமானவோர் இடத்தைப் பெற்றிருந்ததைப் பல்வேறு சான்றுகளும் எடுத்துக்காட்டுகின்றன. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் இலங்கையை ஆட்சிசெய்த காலத்தில் இந்துசமயமும் பல்வேறு இடர்களை எதிர்கொண்டது. இருப்பினும் ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தின்பிற்பகுதியில் வழங்கப்பட்ட சமயசுதந்திரம், பிரித்தானியர்கால மிசனரிமாரின் நடவடிக்கைகள் என்பவற்றின் காரணமாக இலங்கையில் இந்துசமயமும் குறிப்பாக யாழ்ப்பாணத்துஇந்துசமயமும் அதுசார்ந்தபண்பாடும் மறுமலர்ச்சியடைந்தன. இம்மறுமலர்ச்சிக்குச் செட்டிவணிகர்களது பங்களிப்பு பெருமளவில் காணப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்துசமயமறுமலர்ச்சிக்கு செட்டிவணிகர்களின் பங்களிப்பும் முக்கிய காரணமாக அமைந்தது. அவற்றை ஆராய்வதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். இலங்கையில் செட்டிவணிகர்பற்றிய சாதனக்குறிப்புக்கள் கி.பி.8 ஆம்நூற்றாண்டிலிருந்து காணப்படுகின்றன. 10 ஆம்நூற்றாண்டின் பின்னர் இராணுவப்படையமைப்பை உருவாக்கி, சுயாட்சி கொண்ட நகரங்களையும் உருவாக்கியதுடன் தமது நடவடிக்கைகளுக்கு உட்பட்ட முக்கிய நகரங்களிலும், வர்த்தக மையங்களிலும் வழிபாட்டிற்காக ஆலயங்களையும் அமைத்தனர். ஆயினும் 19ஆம், 20ஆம்நூற்றாண்டுகளில் அவர்கள் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாககுடியேறி தனித்துவமான சமூகமாக வரையறுத்துக்கொண்டதன் பின்னர் யாழ்ப்பாணத்துப்பண்பாட்டில் அவர்களின்பங்களிப்பு தனித்துநோக்கப்பட்டது. இப்பின்னணியில் எந்தளவுக்கு யாழ்ப்பாணப் பண்பாட்டில் அவர்களது பங்களிப்புக் காணப்பட்டதென்பதை அறிந்து கொள்வது இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். அத்துடன் பல வணிகச்செட்டிப்பிரிவினர் யாழ்ப்பாணத்தில் காணப்பட்டாலும் நாட்டுக்கோட்டைச்செட்டிகளின் பங்களிப்பே இவ்வாய்வில் பிரதானமாக நோக்கப்படுகின்றது.
இக்காலத்தில் யாழ்ப்பாணக்குடாநாடு, தென்னிந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் வணிகத்தொடர்புகளைக் கொண்டிருந்ததால் அவ்வர்த்தகத்தில் முக்கிய பங்கெடுத்த செட்டிவணிகர்கள் செல்வந்தர்களாக மாறினர். இதனால் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாகக் குடியிருப்புக்களை ஏற்படுத்தியசெட்டிசமூகம் தமது சூழலில் ஆலயங்களை மட்டுமன்றிக் கிராமங்கள், வீதிகள், மடங்கள், கல்லூரிகள், சமூகசமய நிறுவனங்களையும் ஏற்படுத்திக்கொண்டனர். இவற்றிற்கு நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செட்டிசமூகத்தின் வழிவந்த சிலமுக்கியமான குடும்பங்களுடனும், குறிப்பாகப் பெரியவர்களை நேர்கண்டு சேகரிக்கப்பட்ட தரவுகள் முதலாம்தரவுகளாக அமைகின்றன. இரண்டாம்தரவுகளாக சமகாலத்தில் வெளிவந்த பத்திரிகைகள், மற்றும் நூல்கள், கட்டுரைகள் போன்றனவும் பயன்படுத்தப்பட்டு விபரண ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.