Abstract:
எப்போதெல்லாம் சமூகம் மாற்றத்திற்குத் தயாராகின்றதோ அப்போது ஊடகம் மறுமலர்ச்சி காண ஆரம்பிக்கின்றது. போருக்குப் பின்னரான இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை மீட்டெடுக்கவும் மாற்றத்தைக் கொண்டுவரவும் மாற்று ஊடகத்தின் தேவை உணரப்பட்டிருக்கிறது. வெகுஜன ஊடகத் திணிப்பிலிருந்து விலகி, விளிம்பிலிருந்து மையம் நோக்கிய கீழிருந்து மேலான தொடர்பாடல் தான் இன்றைய தேவையாக இருக்கின்றது. இது மக்களை செயலற்ற நிலையிலிருந்து செயற்பாட்டு நிலையில் வைத்திருக்கும். போருக்குப் பின்னரான காலப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்கு, பெண்களின் முன்னேற்றத்திற்கு, அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல்ரீதியான வன்முறைகளுக்கு எதிராக, பாலினப்புதுமையினர் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, நாட்டின் குறைவிருத்தியை மக்களிடம் கூறி அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கு, அரசியல் மற்றும் சட்ட ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பான அறிவை மக்களிடத்தில் கொண்டுசேர்க்க, ஊடக அறத்தையும் சரியான ஊடகப் பயன்பாட்டினையும் மக்களிடம் கொண்டு சேர்க்கவெனப் பல்வேறு விடயங்களுக்காக மாற்று ஊடகத்தின் தேவை இன்று உணரப்பட்டிருக்கிறது.. அதிகாரமற்றவர்களை மௌனிக்கச் செய்யும் வெகுஜன ஊடகப் போக்கிற்கும் தனியாள் உடமைக்கும் எதிரான மாற்று ஊடகம் மனிதத்தை மதிப்பதோடு சமூக, பொருளாதார, பண்பாட்டு, சமய, சாதீய, ஆதிக்க, அதிகார வர்க்கங்களின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகி அடித்தட்டு மக்களால் ஆளப்படுவதாக இருப்பதால் நேரடித் தன்மையுடன் சுயாதீனமாக இயங்கும் வல்லமைமிக்கது. வெகுஜன ஊடகங்கள் பல்வேறு பரிணாமங்களில் மக்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்ற சூழலில் மாற்று ஊடகத்தை குறிப்பாக இணையம் மூலமான மாற்று ஊடகத்தைச் சரியாக ஆழத்தெரிந்தால் சமூக மாற்றம் சாத்தியமாகும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.