dc.description.abstract |
தமிழர், தமிழ்ப் பாரம்பரியம் எனும் கட்டுக்கோப்புக்கு அன்றைய கால ஆட்சி முறைகளின் கட்டுமானங்களும் கைகோர்க்கின்றன. அந்த வகைப்பாட்டிலே வட இலங்கையின் யாழ்ப்பாண அரசிற்கென ஒரு தனித்துவமான வரலாற்றுத்தடம் உண்டு. இது ஏறத்தாழ 13ஆம் நூற்றாண்டிலே தோற்றம் பெற்று 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நிலை பெற்றிருந்தது. இவ்விராட்சியம் தீவுகள், மாதோட்டம், பல்லவராயன்கட்டு, பூநகரி, மன்னார் மற்றும் வன்னிப்பிரதேசம் என்பவற்றை விஸ்தரிப்பிற்குட்படுத்தியதாக அமைந்தது. இவ்வரசு தனது பொருளாதார வாணிபத் தொடர்புகளை பெரும்பான்மையாக விவசாயத்தில் வாணிபத்தினாலேயே ஈட்டிக் கொண்டது. விவசாய உற்பத்தியில் நெல் பிரதான இடத்தினை வகிக்கின்றது. அதனைவிட குரக்கன், வரகு, பயறு, எள்ளு, கரும்பு, கமுகு, பருத்தி முதலானவையும் விவசாயப் புலத்திலே புடம் போடப்பட்டன. பனை சார்ந்த உற்பத்திகளும், சாயவேர், முத்து, சங்கு எனும் ஏற்றுமதி வாணிபமும் சிறப்பாக நிலை பெற்றன. யாழ்ப்பாண இராச்சியத்து நெல் உற்பத்தியானது இறக்குமதிகளில் தங்கியிருந்தது. இதற்கான நெல் விதை மதுரை, தஞ்சாவூர் போன்ற பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி நெல் உற்பத்தி பெருக்கிற்காகச் சிறந்த நீர்ப்பாசனத் திட்டமும் அமைக்கப்பட்டது. யாழ்ப்பாண இராச்சியத்தின் விவசாயப் பொருளாதார வருமானத்தில் அதிக வருமானத்தினை அரசிற்குப் பெற்றுத் தந்தது. நெல்லுக்கு அடுத்தபடியாக பருத்தி விளங்குகின்றது. நூல் திரிக்கப்பட்டு ஆடைகள் நெய்யப்பட்டு வெளிநாடுகள் வரை ஏற்றுமதி செய்யக்கூடிய கட்டமைப்பில் இது திகழ்ந்துள்ளது. இதே போல் சாயவேர் என்பதுவும் இலாபத்தின் முதலீட்டு நிலைப்பாடாக திகழ்ந்துள்ளது. இது தீவகப் பகுதிகளிலும்,வலிகாமம், வடமராட்சி ஆகிய இடங்களிலிருந்தும் பிடுங்கி எடுத்து ஆடைகளுக்கு சாயமூட்டப் பயன்பட்டன. அது வெளிநாடுகளுக்கும் ஏற்றப்பட்டது. பனை உற்பத்தி பொருட்களும் யாழ்ப்பாண இராச்சிய கால விவசாயப் பொருளாதாரத்தில் முதன்மை பெற்றன. யாழ் மக்கள் இன்று வரை பனை உற்பத்தி நுகர்வுகளில் ஆர்வலராக இருப்பது இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும் பனைவள உற்பத்தியில் அதிகபட்ட நன்மையே. தீமைகள் குறைவு. முமுக்க முழக்க வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையில் அமையப் பெற்ற இவ்வாய்வின் பிரதான நோக்கமாக அமைவது யாழ்ப்பாண அரசு விவசாயப் பொருளாதாரத்தினை நெல், பருத்தி, சாயவேர் என்பனவற்றின் மூலம் எவ்வாறு ஈட்டிக்கொண்டது என்பதனைக் கண்டறிதலும் அவற்றின் ஏற்றுமதிகள் தொடர்பாக ஆராய்தலும் ஆகும். இவ்வாய்வில் முதற்தர மற்றும் இரண்டாம் தர ஆதாரங்கள் ஆய்வினது தேவை கருதி பயன்படுத்தப்பட்டுள்ளன. முதல்தர ஆதராங்கள் வரிசையில் யாழ்ப்பாண இராச்சிய கால இலக்கியங்கள், அறிக்கைகள் பிரதான இடத்தினைப் பெறுகின்றன. முதற்தர ஆய்வுகளை அடிப்படையாக வைத்து பிற்பட்ட காலங்களில் எழுதப்பெற்ற நூல்கள், கட்டுரைகள், இணையத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள் என்பவை இரண்டாம் நிலை ஆதாரங்கள் வரிசையிலும் இடம்பெற்றுள்ளன. தொகுத்து நோக்கின் யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் நெல், பருத்தி, சாயவேர் எனும் விவசாய உற்பத்திகள் சிறப்பான பொருளாதாரத்தினை ஈட்டுவதற்கு வழிசமைத்தன என்பது இவ்வாய்வின் ஊடாக வெளித்தெரியும் உண்மையாகும். |
en_US |