dc.description.abstract |
பல்லினச் சமூகத்தவர்கள் வாழ்ந்து வருகின்ற யாழ்ப்பாணக் குடாநாட்டில் இஸ்லாமிய மக்களுக்கென அச்சமூகத்தில் தனியான சிறப்பும் அவர்களுக்கென அப்பகுதியில் நீண்டதொரு வரலாற்று பாரம்பரியமும் உண்டென்பது மறப்பதற்கில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இஸ்லாமிய மக்களது ஆரம்பகாலக் குடியேற்றங்கள் தொடர்பாக பலதரப்பட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதும் யாழ்ப்பாணத்தரசர்கள் காலத்துடன் குறிப்பாக கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்துதான் யாழ்ப்பாணத்தில் இவர்களது குடியேற்றங்கள் நல்லூரை அண்டிய பகுதிகளில் ஏற்பட்டிருந்தமை தொடர்பான சான்றுகள் அதிகளவில் கிடைத்துள்ளன. இருப்பினும் ஏற்கனவே யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகள் கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே காணப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. இதனை சமகாலத்து யாழ்ப்பாணத்தரசர்கள் தொடர்பாக எழுந்த இலக்கியங்கள் மற்றும் போர்த்துக்கேய ஆவணங்களில் காணப்படுகின்ற குறிப்புக்கள் மூலமாகத் தெரிந்துகொள்ள முடிகின்றது. போர்த்துக்கேயர்களது காலத்திலும் சரி தொடர்ந்து வந்த ஒல்லாந்தர்களது காலத்திலும் சரி யாழ்ப்பாணக் குடாநாட்டில் தங்களுக்குரிய சமூக பொருளாதார பண்பாட்டு அடையாளங்களை பின்பற்றி வந்தவர்களாகவே முஸ்லிம் மக்கள் இருந்துவந்துள்ளனர். போர்த்துக்கேயர்களுடைய காலத்தில் மத ரீதியான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இவர்கள் ஒதுங்கி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். பின்வந்த ஒல்லாந்தரது ஆட்சிக்காலத்திலும் ஏறத்தாழ இதே நிலைதான் இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக காணப்பட்ட போதும் அவர்களது ஆட்சிக்காலத்தில் இறுதியில் அளிக்கப்பட்ட மதச்சுதந்திரத்தின் பின்னணியில் முஸ்லிம் மக்கள் தங்களை பல விடயங்களிலும் ஓரளவுக்குச் சுதாகரித்துக்கொள்ள முடிந்தது. ஆங்கிலேயர்களது ஆட்சியில் மீளவும் எழுச்சியுற்று தங்களை ஒரு வர்த்தகப் பிரிவினராக இனங்காட்டிக் கொண்டதுடன் கல்வி உட்பட பல்வேறு துறைகளிலும் யாழ்ப்பாணத்தில் இவர்கள் ஈடுபாடு காட்டிக்கொண்டனரெனலாம். யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயரகள்; மற்றும் ஒல்லாந்தர்களினுடைய ஆட்சிக்காலங்களில் வாழ்;ந்த இஸ்லாமியர்களது நிலை, அவர்களது செயற்பாடுகள் போன்றவை தொடர்பாக ஓரிருவரைத் தவிர இதுவரை காலமும் யாரும் விரிவாக ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. அந்தவகையில் போர்த்துக்கேயர்களது காலம் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒல்லாந்தர்களது காலம், இவ்விரண்டு காலப்பகுதிகளுக்கிடையில் யாழ்ப்பாணத்து இஸ்லாமியர்களது நடவடிக்கைகள் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாகவும் அவர்கள் யாழ்ப்பாணத்து தமிழ் மக்களுடன் வைத்திருந்த உறவு நிலை தொடர்பாகவும் ஒப்பிட்டு ஆவணப்படுத்துவதனை இவ்வாய்வுக்கட்டுரை தனது பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாய்வுக் கட்டுரையில் முதல்தர மற்றும் இரண்டாம் தர சான்றுகள் வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கல்வெட்டுக்கள், நாணயங்கள், கட்டிட அழிபாடுகள் போன்றனவும் குடியேற்றங்கள் இடம்பெற்றதாக கருதப்படுகின்ற 13ஆம் நூற்றாண்டுக்கு பின்னதாக யாழ்ப்பாணத்தரசர்கள் காலத்தேய இலக்கியங்கள் பிரதான முதல்தர சான்றாக உள்வாங்கப்பட்டுள்ளன. பிற்பட்ட காலங்களில் முதற்தர சான்றுகளை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட இலக்கியங்கள், கட்டுரைகள் என்பனவும் ஆய்வின் தேவைகருதிப் பயன்படுத்தப்பட்டுள்ளன. போர்த்துக்கேயரகள்; மற்றும் ஒல்லாந்தர்களினுடைய காலங்களில் இஸ்லாமிய மக்கள் யாழ்ப்பாணத்தில் அரசியல் மற்றும் மத ரீதியான அடக்குமுறைகளுக்கு உட்பட்டவர்களாகக் காணப்பட்டனர். பொருளாதார ரீதியில் அவர்கள் முன்னேறுவதற்கான அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டன. இருப்பினும் அவர்கள் தமது பரம்பரை வர்த்தகத்தினை கைவிடாமல் இன்றுவரை தங்களது வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக அதனை வைத்துள்ளனர். அவர்களது தனிப்பட்ட மத ரீதியான அடையாளங்களையும் ஐரோப்பியர்களால் அழிக்கமுடியவில்லை. |
en_US |