Abstract:
ஆய்வுச்சுருக்கம்: இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் வரலாற்றில் ஆங்கிலேயர்களது வருகையும் அதன் பின்னராக அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆங்கிலேயக் கல்வியும் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கின. 1796இல் இலங்கையின் கரையோரங்களை ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்றிக் கொண்ட இவர்கள் தொடர்ந்து சுதேச மன்னர்களிடமிருந்து 1815இல் மலைநாட்டினையும் கைப்பற்றி இலங்கை முழுவதிலும் சகல துறைகளிலும் படிப்படியாக தமது செல்வாக்கினை நிலைநிறுத்துவதில் பல்வேறு குறிக்கோள்களை மையமாக வைத்து செயற்பட்டனர். குறிப்பாக இவர்களது நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மாற்றங்கள் பலவற்றினை பாரியளவில் உண்டாக்கியதெனலாம். இவர்களது நடவடிக்கைகளில் ஒன்றான ஆங்கிலக்கல்வியின் அறிமுகத்தினால் குறிப்பாக யாழ்ப்பாணச் சமூகமானது வாழ்வியலில் அதுவரை கண்டிராத மாற்றங்கள் பலவற்றினை சந்தித்தது. அதுவரை காலமும் மக்கள் மத்தியில் செல்வாக்கினை பெற்றிருந்த பாரம்பரியங்கள், மரபுகள், சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் என்பனவற்றில் தளர்வு நிலையொன்று ஏற்பட்டது. கற்றோர் குழுவொன்று தோன்றி அரசியலில் மட்டுமன்றி சகல துறைகளிலும் செல்வாக்கினைச் செலுத்த முற்பட்டது. இவர்களை பொதுவாக மத்திய வகுப்பினரென அழைப்பர். வெள்ளைச்சட்டை உத்தியோகங்கள் யாழ்ப்பாண மக்களது கைகளுக்குச் சென்றன. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் தேடிவந்தன. யாழ்ப்பாண மக்கள் மத்தியில் தாராள சிந்தனைகள் உதயமாக ஆரம்பித்தன. அவ்வகையில் பொதுவாக ஆங்கிலக்கல்வியின் அறிமுகத்தின் பின்னணியானது யாழ்ப்பாணச் சமூதாயத்தில் மதப் பரப்புகை, பொருளாதார அதிகரிப்பு என்பவைகளாக இருந்தாலும் கூட யாழ்ப்பாண சமூகத்தின் முன்னேற்றத்தில் இதனது பங்களிப்பானது குறிப்பிடத்தக்க வகையில் அமைந்திருந்தது எனலாம். ஏற்கனவே ஆங்கிலேயரது வருகைக்கு முன்னராக யாழ்ப்பாண அரசர் காலத்தில் நிலவிய கல்விமுறை, போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர்களது கல்வி நடவடிக்கைகள் என்பன யாழ்ப்பாண மக்களது வாழ்வியலில் செல்வாக்கினை செலுத்தியிருந்தாலும் கூட அவையெல்லாம் அவர்களது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டவுடன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வியின் பின்புலத்தில் உருவான மதம் தவிர்ந்த அநேக சமூக மாற்றங்கள் அவர்களது வாழ்வியல் நடவடிக்கைகளில் இருந்து மறைந்து விட்டன. இவ்வாய்வின் மூலமாக அக்கால யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலில் காணப்பட்ட சமூக நிலைப்பாட்டினையும் தொடர்ந்து ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களால் அறிமுகப்படுத்தபட்ட ஆங்கிலக் கல்வியினால் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையும் வெளிக்கொண்டு வருவது பிரதான நோக்கங்களாக உள்ளன. சமூக, வரலாற்று அணுகுமுறையின் பின்னணியில் அளவுசார், பண்புசார் அடிப்படையில் ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வில் மிஷனரிமார்களின் அறிக்கைகள் முதற்தர பிரதான ஆதாரமாகவும் பின்னாளில் முதற்தர ஆதாரங்கள் சிலவற்றினை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நூல்கள், சஞ்சிகைகள், கட்டுரைகள், இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள் என்பவை இரண்டாவது நிலை ஆதாரங்களாகவும் ஆய்வின் தேவை கருதி பயன்படுத்தப்பட்டுள்ளன. முடிவாக ஆங்கிலேயக் கல்வியின் அறிமுகம் என்பதும் அவர்கள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மிஷனரிமார்களது நடவடிக்கைகளும் தற்காலம் வரை யாழ்ப்பாண சமுதாயத்தில் செல்வாக்கு பெற்றவைகளாகத் திகழ்கின்றன. எனவே ஆங்கிலேயர்களது ஆட்சிக்காலத்தில் இவையிரண்டும் நடைபெற்றிருக்காது விட்டிருந்தால் யாழ்ப்பாணச் சமூதாயமானது பல ஆண்டுகள் பின்தங்கிய சமுதாயமாகவே காணப்பட்டிருக்கும்.