Abstract:
ஈழத்தில் இடம்பெற்றுவந்த இனப்பிரச்சனையைப் பொறுத்து ஜெயலலிதாவினது நிலைப்படானது எப்போதும் உறுதியாக இருந்ததில்லை. தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற காலத்திலிருந்து ஈழத்தமிழரது பிரச்சனையில் அக்கறை கொள்ளாதவராகவே இவரது நடவடிக்கைகள் அமைந்திருந்தன. ஆரம்பகாலங்களில் தமிழகத்தினை சேர்ந்த ஈழப்பற்றாளர்களுக்கும் ஈழ ஆதாரவாளர்களுக்கும் எதிராக கடுமையான போக்கினைக் கையாண்டிருந்தவர். இத்தகையதொரு பின்னணியில் அச்சமயத்தில் ஈழத்துத் தமிழ் மக்களால் இவர் விரும்பப்படாத ஒருவராகவே இருந்துள்ளார். ஆனால் 2009 இன் நடுப்பகுதிவரை ஏறத்தாழ 28 வருடங்களாக மாற்றமடையாத அவரது மனநிலை ஈழத்தில் நடைபெற்ற இறுதியுத்தத்தின் முடிவில் மாற்றங்கண்டது. அது அவரை ஈழப்பற்றாளராக மாற்றியது. தொடர்ந்து இலங்கை அரசிற்கு எதிராக கண்டன அறிக்கைகள் பலவற்றினை விடுத்தார.; ஈழத்தழிழர்கள் போரினால் பாதிக்கப்படும் போது கருணாநிதி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் என்று அவருக்கு எதிராக பிரசாரத்தினை மேற்கொண்டு வந்தார.; அவர்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எப்படியாவது 2011 இல் நடைபெறவுள்ள சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் ஆட்சியினை கவிழ்த்துவிடவேண்டுமென எண்ணினார.; வெற்றியும் கண்டார.; இதில் வேடிக்கையாதெனில் 1991இல் நடைபெற்ற சட்டமன்றப்பொதுத்தேர்தலில் புலிகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து கருணாநிதியை தோற்கடித்தவர். 2011இலும் 2016இலும் நடைபெற்ற பொதுத்தேர்தலில் புலிகளையும் அவர்களது தனிநாட்டுக் கோரிக்கைகளையும் முன்வைத்து பிரசாரம் செய்து கருணாநிதியை தோற்கடித்திருந்தார். பொதுப்;படப்பார்த்தால் தமிழகத்தில் ஜெயலலிதா வெற்றிபெற்று ஆட்சியினை அமைத்திருந்த சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல்கள் எல்லாவற்றிலும் ஈழத்தமிழரது பிரச்சினையானது ஏதோ ஒரு வடிவத்தில் அவரால் சுயநல நோக்குடன் பயன்படுத்தப்பட்டதென்பதே உண்மை. அதுவும் சிவில் யுத்த காலத்திற்கு பின்னரான காலப்பகுதியில் அவர் ஈழத்தமிழருக்கு ஆதரவாக எடுத்த நடவடிக்கைகள் எல்லாமே சந்தர்ப்பவாதத் தன்மைகள் கொண்டனவாகவே அமைந்திருந்தன. வரலாற்று அணுகுமுறையினடிப்படையில் அமையப்பெற்ற இவ்வாய்வானது முதற்தர மற்றும் இரண்டாந்தர ஆதாரங்களைப் பயன்படுத்தி விமர்சனப் பார்வையில் நோக்கப்படுகின்றது.