Abstract:
மதம் பரப்பும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க மிஷனரியினர் யாழ்ப்பாணத்தில் தமது பணிகளை முன்னெடுத்து வந்த வேளையில் யாழ்ப்பாணப் பெண்கள் சமூக ரீதியில் கல்வியறிவில்லாது பின்தங்கியிருந்ததை அவதானித்து அவர்களுக்கு கல்வியறிவை வழங்குவதில் கவனம் செலுத்த தொடங்கினர். இதன் பொருட்டு யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளையும்இ மகளிர் விடுதிப் பாடசாலைகளையும் நிறுவிப் பணியாற்றினர். இவற்றின் மூலமாக வழங்கப்பட்ட கல்வியால் பெண்கள் சமூக ரீதியில் முன்னேற்றமடைவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொண்டனர். இவர்களது இத்தகைய கல்விப் பணிகளைத் தொடர்ந்தே பிற மிஷனரிகளும் சுதேசிகளும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த தொடங்கினர். இவர்கள் ஏனைய ஐரோப்பியர்களைப் போன்று மதத்தினைப் பரப்புவதனை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அவற்றில் சமூக நோக்கமும் தாராளமாகக் காணப்பட்டது. இப்பின்னணியில் யாழ்ப்பாணப் பெண்களது கல்வி மேலும் வளர்ச்சி பெறவும் சமூக ரீதியில் முன்னேற்றம் பெறவும் காரணமாக இந்நிறுவனம் அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வகையில் யாழ்ப்பாணப் பெண்கள் சமூக முன்னேற்றம் பெறுவதற்கு காரணமான கல்விப் பணியை ஆரம்பித்தவர்கள் என்ற வகையில் அமெரிக்க மிஷனரியினரது பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் காணப்படுகின்றது எனலாம். யாழ்ப்பாணப் பெண்களின் கல்வி அறிவு வளர்ச்சியடைவதற்கு ஆரம்பத்தை வழங்கியவர்கள் அமெரிக்க மிஷனரியினர் என்பதை வெளிப்படுத்துவதும் இவர்களது கல்விப் பணியானது மத நோக்கம் கருதியதெனிலும் அதில் சமூக நோக்கம் மேலோங்கிக் காணப்பட்டதென்பதனை தெளிவுபடுத்துவதும் இவர்களது கல்விப் பணிகள் பற்றி விபரங்களை பிற்காலச் சந்ததியினர் அறியும் நோக்கில் அவற்றினை ஆவணப்படுத்துவதுமே ஆய்வின் பிரதான நோக்கமாகும். வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாய்வில் முதலாம்தர தரவுகளாக அமெரிக்க மிஷனரியினரிக் குறிப்புக்கள், ஆண்டு அறிக்கைகள், உதயதாரிகை பத்திரிகை தரும் தகவல்கள் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் தர தரவுகளாக சம்பந்தப்பட்டவர்களுடனான நேர்காணல்கள் முதலாம் தரவுகளை அடிப்படையாக வைத்து பின்னாளில் எழுதப்பட்ட நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், சஞ்சிகைகள், இணைய தகவல்கள் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தரசர்களது காலத்தில் இருந்து தொடர்ந்து வந்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலம் வரை பெண் கல்வி என்பது யாழ்ப்பாணத்தில் முன்னேற்றமடையாததொரு நிலையிலேயே காணப்பட்டது. ஆனால் பின்வந்த ஆங்கிலேயரது ஆட்சியில் அமெரிக்க மிஷனரி அமைப்பு வழங்கிய கல்வியானது சமூகத்தில் யாழ்ப்பாண பெண்களது நிலையினை உயர்த்தியதென்பதில் இரு வேறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை.