Abstract:
ஐரோப்பியர்களது வருகைக்கு முன்னரான காலப்பகுதியில அதாவது ஆரியச்சக்கரவர்த்திகளின் காலப்பகுதியில் வடஇலங்கையினது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவிற்கு யாழ்ப்பாண அரசர்களது மேற்பார்வையில் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டின் கீழேயே காணப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி அக்காப்பகுதியில் வடஇலங்கையினது பொருளாதார வளர்ச்சியில் பின்னணியில் நின்றவர்களும் இவர்களே. தொடர்ந்துவந்த ஐரோப்பியர்களது நிர்வாகத்தில் உற்பத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் யாவும் அவர்களது கட்டுப்பாட்டடின் கீழக்; காணப்பட்டபோதும்கூட இஸ்லாமியர்களின் உதவியுடனேயே தமது நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டிருந்தனரென்பது குறிப்பிடத்தக்கது. வடஇலங்கையில் இஸ்லாமியர்களது பாரம்பரிய தொழில்களிலொன்றாக மிக நீண்டகாலமாக இருந்துவந்த தொழில் முத்தக்குளித்தல் மற்றும் முத்து வர்த்தகம் ஆகிய இரண்டுமே. இஸ்லாமியர்களில் பலர் முத்துக்குளிப்பவர்களாகவும் படகோட்டிகளாகவும் காணப்பட்ட அதேநேரத்தில் முத்து விற்பனையிலும் ஈடுபட்டு அதிகளவு இலாபத்தினைப் பெற்றனர். தொடர்ந்தும் தமது இத்தொழிலை கைவிடாமல் மேற்கொண்டு வடஇலங்கையினது பொருளாதார வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருந்தமையினை ஆதாரங்களுடன் நியாயப்படுத்த முடியும். வடஇலங்கையின் பொருளாதாரத்திற்கு இஸ்லாமியர்களின் பங்களிப்பினைப்பற்றி அதுவும் முத்துக்குளித்தல், முத்து வர்த்தகம் தொடர்பாக எவரும் தனித்து விரிவாக ஆராயவில்லையென்ற குறைபாட்டினை இவ்வாய்வானது நிறைவு செய்கின்றது. தற்காலத்தில் அருகிவிட்ட இத்தொழில்களின் தன்மைகள், இத்தொழில்களில் ஈடுபட்டவர்கள் எதிர்கொண்ட சவால்கள், அரசிற்கு கிடைத்த பலன்கள், பிரச்சினைகள் போன்றவற்றினை எடுத்துக்காட்டுவதும், வருங்கால ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக இவ்வாய்வு அமைய வேண்டுமென்பதுவும் ஆய்வினது துணைநோக்கங்களாக உள்ளன. வரலாற்று அணுகுமுறையினடிப்படையில் ஆராயப்பட்டுள்ள இவ்வாய்வில் முதற்தர மற்றும் இரண்டாம்தர ஆதாரங்கள் ஆய்வினது தேவை கருதிப் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதற்தர ஆதாரங்களில் ஐரோப்பியரது அறிக்கைகள் குறிப்பாக டச்சுக்காரரது அறிக்கைகள், தொடர்புபட்டவர்களுடனான நேர்காணல்கள், களஆய்வுகள் என்பன குறிப்பிடத்தக்கன. இரண்டாம்தர ஆதாரங்களின் வரிசையில் முதற்தர ஆதாரங்களை அடிப்படையாகக்கொண்டு பிற்பட்ட காலங்களில் எழுதப்பட்ட நூல்கள், சஞ்சிகைகள், கட்டுரைகள், பத்திரிகைகளின் செய்திகள் மற்றும் இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள் போன்றன அடங்குகின்றன. மேற்குறித்த ஆதாரங்களின் அடிப்படையில் நோக்குகின்றபோது இஸ்லாமியர்களின் பாரம்பரியத்தொழில்களான முத்துக்குளித்தல் மற்றும் முத்து வர்த்தகம் போன்றன வடஇலங்கையினது நிர்வாகமானது ஆரியச்சக்கரவர்த்திகளது காலத்திலும் சரி தொடர்ந்துவந்த ஐரோப்பியர்களது காலத்திலும் சரி சிறப்பாக இயங்குவதற்குப் பக்கபலமாக இருந்ததென்பதனை எவரும் மறக்கமுடியாது.