Abstract:
இலங்கையின் வடபகுதியில் அமைந்து பாரம்பரிய பொருளாதார பண்பாட்டு நிறுவனங்களுடன் அடையாளங் காணப்படடுகின்ற பிரதேசமாக யாழ்ப்பாணப் பிரதேசம் காணப்படுகின்றது. இத்தகைய பிரதேசத்தினுடைய வளர்ச்சியில் அல்லது அபிவிருத்தியில் அதனது பொருளாதார நடவடிக்கைகள் பிரதான இடத்தினைப் பெற்றுள்ளன. யாழ்ப்பாண அரசர்களுடைய காலத்திலும்சரி பின்வந்த ஐரோப்பியர்களது ஆட்சிக்காலத்திலும் சரி அவர்களினால் யாழ்ப்பாணப் பிரதேசத்தினது பொருளாதாரத்தின் அடிப்படையினைத் தென்னிலங்கையிலோ அல்லது மலைநாட்டிலோ மேற்கொண்டதனைப் போன்று மாற்ற முடியவில்லை. மாறாக அவற்றுடன் இணைந்த வகையிலே தான் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் அவர்கள் தமது பொருளாதார நகர்வினையும் சுரண்டலையும் மேற்கொண்டுவந்தனர் என்பதே உண்மை. இதற்கு இறுதியாக 1948 வரை இலங்கை முழுவதிலும் ஆதிக்கத்தினைச் செலுத்திய ஆங்கிலேயர்களும் விதிவிலக்காக அமையவில்லை. இத்தகைய ஆங்கிலேயரது ஆட்சிக்காலத்தின் இறுதிப் பகுதியளவில் (1930 களில்) தமிழ் மக்களை சகல துறைகளிலும் முன்னேற்ற வேண்டுமென்ற நோக்கத்தினை பிரதானமாகக்கொண்டு இலங்கையிலிருந்து வெளிவர ஆரம்பித்த வீரகேசரிஇ தினகரன்இ ஈழகேசரி போன்ற தமிழ் தினசரி மற்றும் வார வெளியீடுகளின் ஊடாக அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட பொருளாதாரநிலை பற்றியும் அவற்றினை முன்னேற்றச் செய்யும் பொருட்டு அவை தெரிவிக்கின்ற கருத்துக்கள் பற்றியும் அறிய முடிகின்றது. சமகாலத்தில் பிற தமிழ் பத்திரிகைகள் சிலவும் வெளிவந்து கொண்டிருந்தாலும் கூட அவை மதச் சார்பானவையாகவோஇ தொழிலாளர்களது நலன்கள் சார்பானவையாகவோதான் அதிகளவில் இருந்தன. ஆதனால் அவை பற்றிய செய்திகளே அவற்றில் பிரதான இடத்தினைப் பெற்றிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இப்பத்திரிகைகள் மூன்றும் கொண்டிருந்த நோக்கங்களில் யாழ்ப்பாணத்தினது பொருளாதார அபிவிருத்தியும் ஒன்றென்பது அவதானிக்கத்தக்கது. இவை அவ்வப்போது தமது வெளியீடுகளின் மூலமாகத் தேசத்தின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்கான ஆலோசனைகளை அரசிற்கும் மக்களுக்கும் தெரிவித்துவந்தன. இக்கால (1930 – 1960) அதாவது இப்பத்திரிகைகள் வெளிவந்தகால யாழ்ப்பாணத்தினது பொருளாதார நிலையினை அறிய விரும்புகின்ற எவரும் இப்பத்திரிகைகளை ஒதுக்கிவிட்டுச் செல்லமுடியாது. முழுக்க முழுக்க வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையில் அமையப்பெற்ற இவ்வாய்வில் முதற்தர மற்றும் இரண்டாம்நிலை ஆதாரங்கள் ஆய்வின் தேவை கருதிப் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதற்தர ஆதாரங்களில் பிரதான இடத்தினைப் பெறுவது வீரகேசரிஇ தினகரன் மற்றும் ஈழகேசரிப் பத்திரிகைகளே. அதாவது ஆய்வும் அப்பத்திரிகைகளை அடிப்படையாகக் கொண்டதாகக் காணப்படுவதனால் அவையே முதற்தர ஆதாரமாக ஆய்வில் கையாளப்படுகின்றன. பின்னாளில் முதற்தரச் சான்றான இப்பத்திரிகைகளை அடிப்படையாக வைத்து எழுந்த நூல்கள்இ கட்டுரைகள்இ இணையத்திலிருந்து பெறப்பட்ட தரவுகள் போன்றன இரண்டாந்தர ஆதாரங்கள் வரிசையில் வைத்து நோக்கப்படுகின்றன. ஆய்வில் பல பிரச்சினைகள் எழுந்தாலும்கூட அவற்றில் பிரதான பிரச்சினையாகக் காணப்படுவது இப்பத்திரிகைகளின் பல வெளியீடுகள் அழிந்த நிலையில் காணப்பட்டதே. மேலும் இதற்கு முன்னோடியான ஆய்வுகள் என்று நேரடியாகக் குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு எவையுமில்லையென்பதும் அவதானிக்கத்தக்கது. ஆவ்வகையில் இதுவே முன்னோடியான ஆய்வாகவும் அமைகின்றது. இவ்வாய்வானது பல நோக்கங்களைக் கொண்டமைந்துள்ளது. எதிர்கால ஆய்வாளர்களுக்கு ஒரு முன்னோடியாக அமைந்து அவர்களுக்கு வழிவிட வேண்டுமென்பதுடன் அக்கால யாழ்ப்பாணத்தினது பொருளாதார நிலையின் தன்மைகள்இ அவற்றினது எழுச்சிஇ வீழ்ச்சிஇ வருவாய் என்பவற்றினை இனங்காண்பதும் ஆய்வினது ஏனைய துணை நோக்கங்களாக உள்ளன. எனவே இப்பத்திரிகைகள் மூன்றும் அவை தருகின்ற கருத்துக்களும் யாழ்ப்பாணப் பிரதேசத்தினது அக்காலப் பொருளாதாரத்தினை அறிந்துகொள்ளுவதற்கான முக்கியமான முதற்தர ஆவணமாக இருக்கின்றதென்பதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை.