Abstract:
சங்க கால இலக்கியங்கள் அக்கால மக்களின் நாகரிகத்தையும் வாழ்வியல் அம்சங்களையும் பறைசாற்றி நிற்கின்றதோடு குறித்த சமூகத்தின் பதிவுகளாகவும் வரலாற்று ஆவணங்களாகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதற்கு சங்க காலத்தில் தோற்றம்பெற்ற ஆற்றுப்படை இலக்கியங்களும் தக்கசான்றுகளாக விளங்குகின்றன. இவ்விலக்கியங்கள் தனித்துவமான இலக்கிய மரபினைக் கொண்டவையாகும். குறிப்பாக மக்களின் வாழ்வியல் முறைகள், பண்பாட்டம்சங்கள், விருந்தோம்பல் பண்புகள் மற்றும் அறம், பொருள், இன்பம், வீடுபேறு பற்றிய செய்திகளைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆற்றுப்படை நூல்களில் திருமுருகாற்றுப்படை ஏனைய ஆற்றுப்படை நூல்களுடன் ஒப்பிடுகையில் தனித்துவம் பெற்றது. 'யான் பெற்ற இன்பம் பெறுக வையகமே' என்ற அருளியல் நோக்கத்துடன் முருகனின் அருளால் வீடுபேறு அடைந்த ஒருவன் அத்தெய்வத்திடம் பிறரையும் வழிப்படுத்துவதாக இந்நூல் விளங்குகின்றது. சங்க நூல்களுக்கெல்லாம் கடவுள் வாழ்த்துப்போல அமைந்திருக்கக்கூடிய சிறப்பும் இந்நூலுக்குண்டு. எனவே, இவ்வாய்வானது திருமுருகாற்றுப்படையின் சிறப்பம்சங்களையும் அதனூடாக வீடுபேறடைதல் பற்றிய செய்திகளையும் ஆராய்வதாகவுள்ளது. இவ்வாய்விற்கு மூல நூலான திருமுருகாற்றுப்படையினையும் அந்நூல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நூல்களையும் கட்டுரைகளையும் இணையத்தளப் பதிவுகளையும் அடிப்படையாகக்கொண்டு ஆராயப்படவுள்ளது.