Abstract:
தொன்மையும், சிறப்பும்மிக்க சனாதனதர்மம்; எனப்படும் இந்துசமயம் யாழ்ப்பாணப்பிரதேசத்தில் 86மூ க்கு மேற்பட்டவர்களால் பின்பற்றப்படும் சிறப்பிற்குரியது. எல்லாப்பிறப்பினுள்ளும் மானிடப்பிறப்பு ஒன்றே மாண்புமிக்கது. வையத்துள் வாழ்வாங்கு வாழும் முறைப்படி வாழ்ந்த மனித உயிருக்கு மிகவும் கௌரவமான இறுதிமரியாதை வழங்கவேண்டும். உயிர்பிரிந்த உடலானது புனிதத்தன்மைபெறுவதினால் அதன் புனிதத்தை மேலும் மேலும் பாதுகாத்துக்கொள்ளவேண்டியது அவசியமாகின்றது. உயிர் பிரிந்த பின்னர் இயல்பாகவும், செம்மையாகவும், கௌரவமாகவும் செய்து முடிப்பதற்கான சில சமயநம்பிக்கை சார்பான நிகழ்வுகளை நிறைவேற்றுகின்ற இடமாக மயானங்கள் விளங்குகின்றன. யாழ்ப்பானப்பிரதேசத்தில் இந்து மக்கள் தமது இறுதிக்கிரியைகளை மேற்கொள்ள சுமார் 244 இந்துமயானங்கள் காணப்படுகின்றன. இவ்இந்து மயானங்கள் சமகாலத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. மாறிவரும் உலகில் சமய, சமுக விழுமியங்கள் பல இன்று கேள்விக்குரியதாக விளங்குகின்றன. இத்தகைய சூழ்நிலையில் இந்து மயானங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இனம்காணப்படுவதுடன் இந்து மயானங்கள் செயல்திறன் கொண்ட சமூகமைய நிறுவனமாக மாற்றியமைப்பதற்கும் சில தீர்வுகளும் முன்வைக்கப்படுகின்றன.