Abstract:
திருக்கோயில்கள் பண்பாட்டின் நிலைக்களனாக விளங்குபவை ஆகும். அவை ஒருநாட்டு மக்களின் பண்பாட்டை கலையுணர்வை, சமூக ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கின்றன. திருக்கோயிற்;கட்டடக்கலை பன்னெடுங்காலமாக படிமுறை வளர்ச்சிபெற்ற இந்து அறிவியலின் ஒரு முக்கிய கூறாக விளங்குகின்றது. நிறைவான வளர்ச்சி பெறுகின்ற போது அவை சாஸ்திர மரபையும், கலை மரபையும் ஆன்மிகத்தோடு இணைத்து நிற்கும் சாதனமாகவும் விளங்குகின்றது. கோயில் என்னும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் குறிப்பதன்று. அது தேர்வு செய்து வரையறுக்கப்பெற்ற நிலப்பகுதி, அதில் கட்டப்பெறும் விமானம், மண்டபங்கள், திருச்சுற்று, பரிவாராலயங்கள், மதில்கள், கோபுரங்கள் எனப்பல்வேறு அங்கங்களை உள்ளடக்கியதாகும். அத்தகைய திருக்கோயில்கள் தன்னகத்தே கொண்டுள்ள பிரதான கூறுகளில் பரிவாராலயங்கள் உயர்ந்த தத்துவமும், உட்பொருளும், அளவுப்பிரமாணங்களும் கொண்டு விளங்குகின்றன.
சைவக்கோயிற் கட்டடக்கiலை உறுப்புக்களில் பரிவாராலயங்களின் அமைப்பு விதிமுறைகளை சைவத்தின் முதல்நூல்களாக விளங்குகின்ற சிவாகமங்களை அடிப்படையாகக் கொண்டு எடுத்துக்கூறுவது இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். சிவாகமங்கள் இருபத்தெட்டாகும். எனினும் சைவக்கோயிற் கட்டடக்கலை பற்றி சிறப்பாகக்கூறுகின்ற காமிகாகமமும், காரணாகமமும் இவ்வாய்வின் மூல நூல்களாக பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாய்வானது விபரண ஆய்வு முறை, பகுப்பாய்வு முறை ஆகிய ஆய்வு முறைகளில் மேற்கொள்ளப்படுகின்றது. மேலும், இவ்வாய்வுக்கான விடயங்கள் களஆய்வு மூலம் வெளிக்கொணரப்படுகின்றது. சிவாகமங்கள் கூறுகின்ற சைவக்கோயிற்கட்டடக்கலை உறுப்புக்களில் பரிவாராலயங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படுகின்றது. சிவாகமம் கூறுகின்ற கோயில் கட்டடக்கலை அமைப்பு விதிமுறைகளை யாழ்ப்பாணப்பிரதேச சைவக் கோயில்கள் எந்தளவிற்கு பேணியுள்ளன என்பதனை தொடர்புபடுத்தி ஆராய்வதாகவும் இவ்வாய்வு அமைகின்றது