Abstract:
இலங்கையில் தோன்றிய தலபுராணங்கள் கிராமிய பண்பாட்டின் பல்வேறு அம்சங்களையும் புலப்படுத்துகின்ற சமய மற்றும் பக்தி இலக்கியங்களாக விளங்குகின்றன. இலங்கைத் தலபுராணங்கள் புலப்படுததும் கிராமிய பண்பாட்டு மரபுகள் பற்றி இதுவரை எந்தவித ஆய்வுகளும் வெளிவராத நிலையில் இலங்கையில் காணப்படும் கிராமிய பண்பாட்டுக் கோலங்களை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வு அமைகின்றது. அத்துடன் தலபுராணங்கள் புலப்படுத்தும் கிராமிய பண்பாட்டு மரபுகள் கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களை உள்வாங்கியிருப்பதும் இக்கட்டுரையில் முன்வைக்கப்படுகின்றது.
இலங்கையில் கிராமியப் பண்பாட்டை வளம்படுத்தி வரும் பண்பாட்டு மூலங்களுள்; இலங்கைத் தலபுராணங்கள் தனித்துவமுடையனவாக விளங்குகின்றன. தலபுராணம் என்பவை மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய கோயிற் பண்பாட்டு அம்சங்களை சிறப்பாகப் புலப்படுத்தும் இந்துப்பண்பாட்டு இலக்கியங்களாக விளங்குகின்ற போதும் அவை கிராமிய பண்பாட்டின் பல்வேறு அம்சங்களையும் வெளிப்படுத்துகின்ற கருவூலங்களாக விளங்குகின்றன.
இந்தவகையில் இலங்கைத் தலபுராணங்களில் ஆகமம் சார்ந்த வழிபாட்டு மரபுகள் மட்டுமன்றி ஆகமமரபிற்கு புறம்பான கிராமிய வழிபாட்டு முறைகளும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இலங்கைத் தலபுராணங்கள் புலப்படுத்தும் கிராமியப் பண்பாட்டுக் கூறுகளை வெளிக்கொண்டு வருவது இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். இருப்பினும் தலபுராணங்கள் புலப்படுத்தும் கிராமியப் பண்பாட்டு மரபுகள் தற்காலத்தில் மாற்றம் பெற்று விளங்குவதையும் இவ்வாய்வுக் கட்டுரையில் ஆராயப்படும்.
இவ்வாய்வானது கி.;பி 14ஆம் நூற்றாண்டு தொடக்கம் 20ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தை எல்லையாகக் கொண்டு அமைகின்றது. இக்காலப் பகுதிக்குள் தோன்றிய சிவாலயங்கள் மீதெழுந்த தலபுராணங்களே இவ்வாய்வின் மூலங்களாக அமைகின்றன.
இவ்வாய்வுக்கான பல விபரங்கள் கள ஆய்வின் மூலம் வெளிக்கொணரப்படும். விபரண முறை, பகுப்பாய்வு முறை ஆகிய ஆய்வு முறைகளில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.