Abstract:
நோயும், மருத்துவமும் மனிதஇனப் பண்பாட்டுவரலாற்றில் பிரிக்க முடியாதவைகளாகும். ஒவ்வொருமனித சமுதாயமும் தனக்கென ஒரு மருத்துவ அமைப்பு முறையைக் கொண்டுள்ளது. இந்துக்களைப் பொறுத்தவரையில் ஆயுர்வேதம், சித்தமருத்துவம் என்ற இருபெரும் அறிவுப்புலங்களாக வளர்ச்சியுற்றது. மிகப்பழமையான மருத்துவமுறை என ஆயுர்வேத மருத்துவமுறையை குறிப்பிடுவர். தென்னிந்திய மரபோடு குறிப்பாக தமிழகத்தின் பதினொரு சித்தர்மரபோடு தொடர்புற்று வளர்ந்த மருத்துவப்புலமாக சித்தமருத்துவம் விளங்குகின்றது. தென்னிந்தியவரலாற்றுச் செல்நெறியில் அந்நியப்படையெடுப்புக்களாலும், ஆட்சியாளர்களின் கவனிப்பின்மையினாலும் சித்தமருத்துவம் தேக்கமடைந்தது. இதனை நாட்டார்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள் என்பன நிரப்பமுயன்றன. இத்தகைய ஊடாட்டத்தின் வெளிப்பாடாக நாட்டுப்புற மருத்துவம் என்ற கருத்தாக்கம் தமிழில் பிரபல்யமடைந்தது. நாட்டுப்புறமக்கள் கையாளும் மருத்துவமுறைகளை நாட்டுப்புற மருத்துவம் என்பர். இது கிராமப்புறமக்களின் பண்பாட்டோடும், பழக்கவழக்கத்தோடும், சமுகஅமைப்போடும் பின்னிப்பிணைந்துள்ளது. அறிவியல், நாகரிக, இயந்திர வளர்ச்சிபெற்ற இக்காலத்தில் கூட நாட்டுப்புறமருத்துவமுறை வழக்கிலுள்ளது. இந்துக்கள் தமது பண்பியற்கூறுகளை பல்வேறு பரிணாமங்களிலும் பாதுகாத்து வருகின்றனர் அந்நிலையில் மாறிவரும் சமுதாய நிலையில் நாட்டுப்புற மருத்துவத்தை பாதுகாக்கவேண்டியது அவசியமாகும். இந்துக்களின் மருத்துவப்பாரம்பரியத்தில் நாட்டுப்புறமருத்துவம் பற்றி ஆய்வுகள் விரிவாக வெளிவராத நிலையில் அதனை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வு அமைகின்றது. விபரண மற்றும் பகுப்பாய்வு முறைகளில் மேற்கொள்ளப்படுவதுடன் இவ்வாய்வுக்கான தரவுகள் களஆய்வு மூலம் வெளிக்கொணரப்படுகின்றது.