Abstract:
இயற்கை, சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்கின்ற விஞ்ஞான செயன்முறைக்குரிய வரன்முறைகளை வழங்குவதாக விஞ்ஞான முறையியல் அமைகின்றது. விஞ்ஞான முறையியல் தொடர்பாக காலத்துக்குக் காலம் பல முறையியலாளர்களால் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. இவர்களில் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த தோமஸ்கூனினுடைய சிந்தனைகள் முக்கியமானவை. விஞ்ஞான அறிவு தொடர்பான அவரது ஆய்வுகள் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. அவற்றுள் கட்டளைப்படிம மாற்றம் தொடர்பான சிந்தனைகள் முதன்மைக்குரியவை. தோமஸ்கூனினுடைய கட்டளைப்படிம மாற்றம் தொடர்பான முறையியல் அணுகுமுறையானது பின்னைப் புலனெறிவாதத்திற்கு முதன்மையான ஓர் பங்களிப்பினை வழங்கியிருந்தது. தோமஸ்கூனினுடைய கருத்துப்படி விஞ்ஞான வளர்ச்சியானது கட்டளைப்படிம மாற்றங்களின் ஊடாகவே இடம்பெற்று வந்திருக்கின்றது. இக் கட்டளைப்படிம மாற்றமானது சாதாரண காலம், புரட்சிக் காலம் என இருவேறுபட்ட காலங்களுக்கூடாக இடம் பெறுகின்றது. புரட்சியின் மூலம் சாதாரண காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த கட்டளைப்படிமம் நிராகரிக்கப்பட்டு புதிய கட்டளைப்படிமம் முன்மொழியப்படுகின்றது. இந்த செயன்முறையே விஞ்ஞான வளர்ச்சிக்கு அவசியமானது என தோமஸ்கூன் கருதியதோடு அதனை பல்வேறு படிமுறைகளுக்கு ஊடாக விளக்கினார். கட்டளைப்படிம மாற்றமே உண்மையான விஞ்ஞான வளர்ச்சியை சாத்தியமாக்குகின்றது என்கின்றார். எனினும் தோமஸ்கூனினுடைய கட்டளைப்படிம மாற்றம் சார்ந்த முறையியல் மாஹ்ரட் மாஸ்ரர் மான், பெயராபென்ட், லக்காதோஸ், லூடான் ஆகியோரால் விமர்சனங்களுக்கும் உட்படுத்தப்பட்டிருந்தது. எனவே பின்னைப் புலனெறிவாதத்தில் தோமஸ்கூனினுடைய சிந்தனைகளில் செல்வாக்கினையும், அதற்கெதிரான திறனாய்வுரைகளையும் பகுப்பாய்வு செய்வதாக இவ் ஆய்வுக்கட்டுரை அமைகின்றது. இவ்ஆய்வுக் கட்டுரையானது விபரண முறையியல், பகுப்பாய்வு முறையியல், விமர்சன முறையியல் என்பவற்றின் துணை கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. இவ் ஆய்வுக்குரிய தரவுகள் தோமஸ்கூனினுடைய பிரதான நூல்களில் இருந்தும், கூனினுடைய சிந்தனைகள் தொடர்பாக வெளிவந்த நூல்கள், மற்றும் பருவ இதழ்களில் வெளியான கட்டுரைகள் என்பவற்றிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.