Abstract:
பௌத்த மெய்யியலில் முதன்மை பெற்று விளங்கும் பிரதித்ய சமுத்பாதம், பன்னிரு சார்புகளின் அடிப்படையில் தெளிவுபடுத்தி நிற்கின்ற விடுதலைக்கான மார்க்கத்தினையும், அந்த பன்னிரு சார்புகளுக்கிடையிலான காரணகாரிய அடிப்படைகளையும் பகுப்பாய்வு செய்வதாக இவ் ஆய்வுக் கட்டுரை அமைகின்றது. அதாவது காரணகாரியக் கோட்பாடு என்பது அறிவாராட்சியியலிலும், விஞ்ஞான மெய்யியலிலும் சிறப்புற்று விளங்கிய ஓர் கோட்பாடாகும். விஞ்ஞான வரலாற்றில் பல கொள்கைகள் காரணகாரிய அடிப்படையிலேயே விளக்கம் பெற்றுள்ளன. அத்தகைய காரணகாரிய அடிப்படையில் பிரதித்ய சமுத்பாதம் எவ்வாறு விடுதலைக்கான மார்க்கத்தினை தெளிவுபடுத்தி நிற்கின்றது என்பதனைப் பகுப்பாய்வு செய்வதே இவ் ஆய்வின் நோக்கமாகும். பௌத்தம் புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு சமயமும், தத்துவமும் ஆகும். இறைவன், ஆன்மா போன்றவற்றை மறுதலிக்கின்ற அவைதீக தர்சனங்களில் ஒன்றான பௌத்தம் மறுபிறப்பு என்னும் கருத்தாக்கத்தினை ஏற்றுக் கொள்கின்றது. இந்த மறுபிறப்பினை அதாவது மீண்டும் பிறக்கின்ற நிலையினை இல்லாதொழிப்பதே விடுதலை என பௌத்தம் எடுத்துரைக்கின்றது. அந்நிலையினை அடைவதற்குரிய மார்க்கத்தினை பிரதித்ய சமுத்பாதம் எனும் சார்பில் தோற்றக் கொள்கை தெளிவுபடுத்தி நிற்கின்றது. எந்தவொரு காரியத்திற்கும் காரணம் உண்டு என காரணகாரியக் கொள்கை வலியுறுத்துகின்றது. பிறப்பு, இறப்புக்குரிய காரணங்களை மெய்யுணர்வினால் ஆராய்ந்து கண்ட புத்தரினால் முன்வைக்கப்பட்ட 'பிரதித்ய சமுத்பாதம்' எனும் சார்பில் தோற்றக் கொள்கையும் இத்தகையதொரு நிலைப்பாட்டினை உடையதாகவே விளங்கியது. அதாவது பிரதித்ய சமுத்பாதம் ஒன்று தோன்ற ஒன்று சார்பாக உள்ளது என்ற சார்புக் காரணத்தைக் கொண்டது. அறியாமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்ச்சி, வேட்கை, பற்று, பவம், பிறப்பு, வினைப்பயன் எனும் பன்னிரு சார்புகளின் காரணகாரியச் சுழற்சியைக் கொண்டது. 'காரணத்தால் தான் விளைவுகள் சாத்தியப்படுகின்றன்;;;;;; காரணங்கள் நீக்கப்படுகின்ற போது விளைவுகளும் நீக்கப்படுகின்றன் காரணமின்றி எதுவும் தோன்றுவதில்லை; ஒரு தனிக் காரணத்திலிருந்து எதுவும் தோன்றுவதில்லை; சார்பற்று எதுவும் இருப்பதில்லை; முதற் காரணம் என்று எதுவும் இல்லை' என பிரதித்ய சமுத்பாதம் விளக்குகின்றது. இத்தகைய காரணகாரிய அடிப்படையே பிரதித்ய சமுத்பாதம் காட்டும் விடுதலைக்கான மார்க்கமும் ஆகும். இவ் ஆய்வுக் கட்டுரையானது விபரண முறையியல், பகுப்பாய்வு முறையியல், விமர்சன முறையியல் என்பவற்றின் துணை கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. இவ் ஆய்வுக்குரிய தரவுகள் பௌத்தமதக் கொள்கைகள் மற்றும் சிந்தனைகள் தொடர்பாக வெளிவந்த நூல்கள், மற்றும் பருவ இதழ்களில் வெளியான கட்டுரைகள் என்பவற்றிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.