Abstract:
இவ் ஆய்வுக் கட்டுரையானது எமில்டுர்ஹைமினால் முன்வைக்கப்பட்ட விஞ்ஞான முறையியல் மாதிரியானது சமூக மெய்யியல் ஆய்வுகளில் ஏற்படுத்திய தாக்கத்தினை மதிப்பீடு செய்வதாக அமைகின்றது. டுர்ஹைமினுடைய மெய்யியல் அணுகுமுறைகள் சிறந்ததொரு முறையியல் மாதிரியாகளூ இன்றும் பல்வேறு ஆய்வாளர்களினால் எடுத்தாளப்படுவதாக அமைந்துள்ளன. சமூக விஞ்ஞானத்தில் பௌதீக விஞ்ஞானப் படிமுறைகளைப் புகுத்தி அனுபவ ரீதியான தரவுகள் மூலம் சமூகத்தின் நடைமுறைகளை ஆராய முடியும் என்ற புலனெறிவாத நோக்கின் அடிப்படையில் எமிர்டுர்ஹைமினுடைய முறையியல் மாதிரிகள் அமைந்திருந்தமை இதற்கு முக்கிய காரணம் எனலாம். மேலும் டுர்ஹைமினுடைய அணுகுமுறையில் சமூகத் தோற்றப்பாடுகளே சமூக மெய்மைகளாக இனங்காணப்பட்டு அவை சமூகவியலின் ஆய்வுப் பொருளாக வரையறை செய்யப்பட்டன. அத்தகைய சமூக மெய்மைகள் குறித்த ஆய்வில் விஞ்ஞான முறைகளின் பிரயோகத்தினை டுர்ஹைமினுடைய முறையியல், செயற்பாட்டியல் பகுப்பாய்வு, தற்கொலை என்பன பற்றிய ஆய்வுகள் பிரதிபலித்து நிற்கின்றன.
'இயற்கை விஞ்ஞானங்கள் எத்தகையதொரு முறையியலினால் அணுகப்படுகின்றதோ அத்தகையதொரு முறையியலாலேயே சமூக விஞ்ஞானங்களும் அணுகப்பட வேண்டும்' என வாதிட்ட டுர்ஹைம் சமூகம் குறித்த ஆய்வுகளில் விஞ்ஞான முறைகளைப் பிரயோகப்படுத்துவதில் ஓர் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியிருந்தார். அவ்வாறு சமூகத் தோற்றப்பாடுகளை விஞ்ஞான முறையியல்களை அடிப்படையாகக் கொண்டு டுர்ஹைம் அணுகியமையானது சமூகவியல், மானுடவியல் போன்ற புதிய துறைகளின் பரிணாமத்திற்கு வித்திட்டது. இதுவே அவருக்கு 'நவீன சமூகவியலின் தந்தை' எனும் சிறப்பினைப் பெற்றுத் தந்தது. இந்த வகையில் புலனெறிவாத நோக்கில் அமைந்;த டுர்ஹைமின் சமூக விஞ்ஞான முறையியல் குறித்த சிந்தனைகளையும், அவற்றின் வளர்ச்சியையும், அவை தொடர்பான விமர்சனங்களையும் பகுப்பாய்வு செய்வதாக இவ் ஆய்வுக் கட்டுரை அமைகின்றது. இவ் ஆய்வுக் கட்டுரையானது விபரண முறை, பகுப்பாய்வு முறை, விமர்சன முறை என்பவற்றின் துணைகொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்குரிய தரவுகள் டுர்ஹைமினுடைய சமூகவியல் பங்களிப்புக்கள் சார்ந்த நூல்கள் கட்டுரைகள் போன்ற இரண்டாம் நிலைத் தரவுகள் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.