Abstract:
இவ் ஆய்வுக் கட்டுரையானது கருத்துமுதல் வாதத்திற்கு எதிரான ரஸலினுடைய அணுகுமுறைகள் சமகால மெய்யியற் சிந்தனைகளில் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பகுப்பாய்வு செய்வதாக அமைகின்றது. எமது புறவுலக அறிவு தொடர்பாக மெய்யியலாளர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு சிந்தனைகளுள் கருத்துமுதல் வாதமும் ஒன்றாகும். இக் கருத்துமுதல்வாத சிந்தனையானது 19ம் நூற்றாண்டின் ஆரம்பம் தொடக்கம் ஐரோப்பா முழுவதும் செல்வாக்குச் செலுத்தியிருந்தது. இமானுவெல் கான்ட் (ஐஅஅயரெநட முயவெ) பிட்சே, ஸ்கெல்லிங், ஹெகல், பிராட்லி போன்ற மெய்யியலாளர்களால் இக்கருத்துமுதல் வாதம் வளர்த்தெடுக்கப்பட்டது. பிராட்லியினுடைய எழுத்துக்களால் கவரப்பட்ட பேர்ட்ண்ட் ரஸல் ஆரம்பத்தில் கருத்துமுதல் வாதியாக விளங்கியிருந்தாலும் பின்னர் ஜீ.ஈ.மூரினுடைய வழிகாட்டலினால் கருத்துமுதல் வாதத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்தார். ரஸலினுடைய கருத்துமுதல் வாதத்திற்கு எதிரான புரட்சியானது மேலைத்தேய மெய்யியல் வரலாற்றில் பாரிய திருப்புமுனையாக அமைந்தது. கருத்துமுதல் வாதத்திற்கு எதிராக ரஸல் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் தனது வாதங்களை முன்வைத்தார். கருத்துமுதல் வாதத்திற்கு மாறாக பொருளின் இருப்புக் குறித்த தெளிவான விளங்கங்களை முன்வைத்தார். பொதுப்புத்தி, பொதுப்பொருட்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கருத்துமுதல் வாதத்திற்கு எதிரான தனது வாதங்களை முன்வைத்ததோடு, தனது இந்த நிலைப்பாட்டினை தனது சிந்தனைகள் அனைத்திலும் வெளிப்படுத்தியிருந்தார். அவரது தர்க்க அணுவாதம், இலட்சிய மொழி ஆகிய சிந்தனைகள் இதற்குச் சான்றுபகர்கின்றன. ரஸலினுடைய சிந்தனைகளின் விளைவாக மேலைத்தேய மெய்யியலில் பகுப்பாய்வு மெய்யியல், கண்ட மெய்யியல் எனும் இருபெரும் பிரிவுகள் தோற்றம் பெற்றன. அதுமாத்திரமன்றி ரஸலினுடைய கருத்துமுதல் வாதத்திற்கு எதிரான சிந்தனைகள் பிற்பட தோற்றம் பெற்ற தர்க்கப் புலனெறிவாதம் போன்ற பல்வேறு சிந்தனைப் பள்ளிகளுக்கும், விக்கின்ஸ்ரைன், காள்பொப்பர், ஏ.ஜே.அயர் போன்ற பல மெய்யியலாளர்களின் சிந்தனைகளுக்கும் முன்னோட்டமான சிந்தனைகளாக அமைந்திருந்தன. எனவே மேலைத்தேய மெய்யியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்ற கருத்துமுதல் வாதத்திற்கு எதிரான ரஸலினுடைய அணுகுமுறைகளையும், அதற்கு எதிரான விமர்சனங்களையும், பிற்பட்ட வளர்ச்சியையும் பகுப்பாய்வு செய்வதாக இவ் ஆய்வுக் கட்டுரை அமைகின்றது. இவ் ஆய்விற்குத் தேவையான தரவுகள் ரஸலினுடைய பிரதான நூல்கள், பருவ இதழ்களில் வெளியான கட்டுரைகள், இணையத்தளக் கட்டுரைகள் போன்றவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றன. மேலும் இவ் ஆய்வானது விபரணமுறை, பகுப்பாய்வுமுறை, விமர்சனமுறை என்பவற்றின் துணைகொண்ட மேற்கொள்ளப்படுகின்றது.