dc.description.abstract |
நவீன காலத்தில் நிலவிய அறிவாராட்சியலின் நியாயவாதம், அனுபவவாதம் எனும் இரு பெரும்பாரம்பரியங்களை கான்டினுடைய சிந்தனைகள் ஒருங்கிணைத்த தன்மையினையும், அவை சமகால மெய்யியலில் ஏற்படுத்திய தாக்கங்களையும் மதிப்பீடு செய்வதாக இவ் ஆய்வுக் கட்டுரை அமைகின்றது. உண்மை அறிவு எவ்வாறு எழுகின்றது எனும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட ஒரு கொள்கைகள் (அறிவுமுதல் வாதம், அனுபவமுதல் வாதம்) நவீன கால தத்துவ உலகில் நிலவின. அறிவு முதல்வாதம் நியாயித்தலையும், அனுபவமுதல் வாதம் புலனனுபவத்தையும் பிறப்பிடமாகவும், அடிப்படையாகவும் கொண்டது எனலாம். இவ்விரு தத்துவங்களுமே குறைபாடுடையனவாய் காணப்பட்ட பொழுதிலும் இரண்டிலுமே உண்மைக் கூறுகளும் காணப்பட்டன. ஒன்றில் காணப்படும் உண்மைக்கூறு மற்றையதன் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் காணப்பட்டது. எனவே இவ்விரு தத்துவங்களையும் இணைத்து முழுமையான ஓர் தத்துவத்தை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஜேர்மனிய தேசத்தைச் சேர்ந்த இமானுவெல் கான்ட் இப்பணியை முன்னெடுத்தார் (அவரது இப்பணியினை காலம், வெளி, தீர்ப்புக்கள் என்பன பற்றிய சிந்தனைகள் தெளிவாக வெளிப்படுத்தின). இது அறிவாராட்சியியல் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது. கான்டினுடைய சிந்தனைகள் ஐரோப்பா முழுவதும் தனது செல்வாக்கினை விஸ்தரித்துக் கொண்டது. 19ம் நூற்றாண்டில் இமானுவெல் கான்டின் சிந்தனைகள் பெற்றிருந்த செல்வாக்கினைப் போல் வேறு எந்த சிந்தனைகளும் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. எனினும் பிற்பட்ட காலத்தில் கான்டினுடைய சிந்தனைகள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டன. இதன் விளைவாக சமகால மெய்யியலில் கான்டினுடைய சிந்தனைகளை ஆதரிப்பதும் (கண்ட மெய்யியல்), விமர்சிப்பதுமான (பகுப்பாய்வு மெய்யியல்) இருபெரும் தத்துவப் பிரிவுகள் வளர்ச்சி பெற்றுள்ளன. இந்த வகையில் முன்னெழுந்த சிந்தனைகளின் சங்கமமாகவும், பின்னெழுந்த சிந்தனைகளின் ஊற்றாகவும் கான்டினது சிந்தனைகள் விளங்கின. இதனாலே தான் 'இமானுவெல் கான்ட் அவர்களின் தத்துவங்களை அறியாதோர், அவருக்குப் பின்னெழுந்த தத்துவங்களைப் புரிந்து கொள்ள இயலாது' என்றொரு கருத்து தத்துவ உலகில் நிலவுகின்றது. எனவே கான்டினுடைய சிந்தனைகளின் பரிமாணத்தையும், அவை பின்னெழுந்த சிந்தனைகளில் ஏற்படுத்திய தாக்கத்தினையும் பகுப்பாய்வு செய்வதாக இவ் ஆய்வுக்கட்;டுரை அமைகின்றது. இவ் ஆய்விற்குத் தேவையான தரவுகள் கான்டினுடைய பிரதான நூல்கள், பருவ இதழ்களில் வெளியான கட்டுரைகள், இணையத்தளக் கட்டுரைகள் போன்றவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றன. மேலும் இவ் ஆய்வானது விபரணமுறை, பகுப்பாய்வுமுறை, விமர்சனமுறை என்பவற்றின் துணைகொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. |
en_US |