Abstract:
மனிதன் தன்னைப் பற்றியும், தன்னைச் சூழவுள்ள பிரபஞ்சம், இயற்கை குறித்தும் சிந்திக்கத் தொடங்கியது முதல் மெய்யியற் சிந்தனைகள் தோற்றம் பெற்றன என்பர். இதனாலே தான் பிரபஞ்சம் குறித்து சிந்தித்த தேலிஸ், அனெக்ஸிமாந்தர், அனெக்ஸிமினிஸ் ஆகிய மூவரும் இயற்கை மெய்யியலாளர்கள் என்றும், முதல் மெய்யியலாளர்கள் என்றும் வழங்கப்படுகின்றனர். கீழைத்தேயத்தில் இந்திய சிந்தனை மரபின் மூல ஊற்றுக்களாக விளங்கும் வேத உபநிடதங்கள் சமயத்தோடு இணைந்த வகையில் பிரபஞ்சம் குறித்த மெய்யியற் சிந்தனைகளை வெளிப்படுத்தி நின்றன. இந்த வகையில் தமிழர் சிந்தனை மரபினை பிரதிநிதித்துவப்படுத்தி நிற்கும் நூல்களில் முதன்மை நூல் என்று கருதப்படக்கூடிய திருக்குறளும் பிரபஞ்சம் குறித்த சிந்தனைகளை இன்றைய அறிவியலுக்கு நிகராக வெளிப்படுத்தி நின்றது. நேரடியாகவும், உவமை; உருவகங்களாக மறைமுகமாகவும் திருக்குறள் வெளிப்படுத்தி நின்ற ஆழமான பிரபஞ்சவியற் சிந்தனைகளை பகுப்பாய்வு செய்து அவற்றின் சிறப்பினை எடுத்துக்காட்டுவதே இவ் ஆய்வின் குறிக்கோளாகும். இவ் ஆய்விற்கான தரவுகள் திருக்குறள் மூல நூலில் இருந்தும், திருக்குறளில் பிரபஞ்சவியல் சார்ந்து வெளியிடப்பட்ட நூல்கள், கட்டுரைகளில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. மேலும் இவ் ஆய்வானது பகுப்பாய்வு முறை, விபரண முறை, ஒப்பீட்டு முறை என்பவற்றின் துணைகொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.