Abstract:
இலங்கையின் எல்லாப் பிராந்தியங்களுக்கும் தனித்துவமான வரலாறு இருப்பதாகக் கூறமுடியாது. ஆனால் 3000 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு கொண்ட யாழ்ப்பாணம் பண்டு தொட்டு இலங்கை வரலாற்று மூலங்களில் தனித்து அடையாளம் காணப்பட்டுள்ளது. இது பாளி இலக்கியங்களில் நாகதீப(ம்) எனவும், தமிழ் இலக்கியங்களில் நாகநாடு எனவும் குறிப்படப்பட்டுள்ளது. இதைச் சற்றுப் பிற்கால பிராகிருத மற்றும் தமிழ் மொழிக் கல்வெட்டுக்களும் உறுதிப்படுத்துகின்றன. ஆயினும் இதன் தொன்மையான தொடர்ச்சியான வரலாறு 16ஆம் நூற்றாண்டு வரை வரலாற்று இலக்கியங்களில் குறைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்நிலையில் 1970 களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் யாழ்ப்பாண வரலாற்றிற்கு புது வெளிச்சமூட்டுவதாக அமைந்துள்ளன. இதற்கு மேலும் வலுவூட்டும் வகையில் இலங்கை தொல்லியல் திணைக்களமும், யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறையும் இணைந்து 2010 இல் இருந்து மேற்கொண்டு வரும் தொல்லியல் ஆய்வுகள் யாழ்ப்பாணத்து மரபுரிமையை மேலும் வெளிச்சத்திற்கு கொண்டுவர உதவியுள்ளன. மரபுரிமை என்பது எமது முன்னைய சந்ததிகளில் இருந்து கொண்டுவரப்படுவதாகும். இது பாரம்பரியமாக முன்னோர்களால் வைத்திருக்கப்பட்ட உருவமற்ற சொத்து அல்லது கலை அல்லது சம்பிரதாயத்தால் கொண்டுவரப்படும் நடைமுறைகள், கட்டடங்கள், சமூகம் மற்றும் கலாசாரம் போன்றவற்றிற்கு முக்கியமாக கருதப்படும் வரலாறு, நம்பிக்கைகள் போன்றவற்றை குறிக்கும். இதனால் மரபுரிமை என்பது வரலாற்றுச் சூழலின் ஒரு உள்ளீட்டு அங்கமாக கொள்ளப்படும். ஆனால் இதனை ஒரு விடயமாக மட்டும் வரைவிலக்கணப்படுத்த முடியாது. இது பல்வேறு அம்சங்களின் தொகுப்பாகும். பண்பு, அடையாளம், கலாசார வேறுபாடு என்பன காலந்தோறும் கட்டியெழுப்பப்படும். இவற்றின் கலவை ஒரு இடத்தின் மரபுரிமையை உருவாக்க பயன்படும். பொதுவாக ஒரு நாட்டின் மரபுரிமையை கலாசார மற்றும் இயற்கை அம்சங்களைக் கொண்டு கலாசார மரபுரிமை, இயற்கை மரபுரிமை என இரண்டாக பிரிக்கலாம். இதில் கலாசார மரபுரிமை. கண்ணுக்கு புலப்படக்கூடிய, கண்ணுக்கு புலப்படாத இரு அம்சங்களைக் கொண்டு காணப்படுகின்றது. இது ஒரு குழு அல்லது சமூகத்தால் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்டதும்இ நிகழ்காலத்தில் தொடர்ந்து பராமரிக்கப்படுவதும், எதிர்காலத்தில் அடுத்த சந்ததியினரின் நலனுக்காக கொடுக்கப்பட வேண்டியவையுமாகும். இவ்வாய்வு கண்ணுக்கு புலப்படக்கூடிய யாழ்ப்பாணத்தில் உள்ள புராதன குடியிருப்பு மையங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமய வழிபாட்டு ஸ்தலங்கள், யாழ்ப்பாண இராசதானி கால கட்டடங்கள், ஐரோப்பியர் கால கோட்டைகள், ஐரோப்பியர் கால அரச நிர்வாக மையங்கள், வெளிச்ச வீடுகள் முதலான மரபுரிமைச் சின்னங்களை அடையாளப்படுத்தி, ஆவணப்படுத்திஇ அதன் வரலாற்றுஇ முக்கியத்துவத்தினை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றுஇ மரபுரிமைச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்ற சூழலை உருவாக்குவதாகும். இதன் மூலம் மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போவது மக்களால் தடுக்கப்படுவதற்குரிய ஒரு சூழலை உருவாக்குவதுடன்இ அவற்றை பாதுகாப்பதன் மூலம் எமது எதிர்கால சந்ததியினருக்கு எமது மரபுரிமைச் சின்னங்களை ஒப்படைப்பதுமாகும்.