Abstract:
இந்த ஆய்வுக்கட்டுரையானது மனிதர்களைப்போலவே மனிதரல்லாத விலங்குகளுக்கும் உரிமைகள் உள்ளதா இல்லையா என்பது குறித்த ஓர் ஒழுக்க மெய்யியல் ஆய்வாக அமையவுள்ளது. சமகால ஒழுக்க மெய்யியலில் மனிதரல்லாத விலங்குகளது உரிமைகள் மற்றும் அதன் நலன்கள் தொடர்பான கருத்துக்கள், செயற்பாடுகள் முதன்மை பெற்று காணப்படுகின்றன. இத்தகைய சிந்தனைகளும் செயற்ப்பாடுகளும் அண்மைக் காலங்களில் மேலைத்தேய நாடுகளில் அதிகமாக வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும் இலங்கை, இந்தியா போன்ற தென்னாசிய நாடுகளில் மனிதரல்லாத விலங்குகளுக்குள்ள உரிமைகள் குறித்த விழிப்புணர்வோ அல்லது அவற்றினை பாதுகாக்கும் நடைமுறைகளோ திட்டங்களோ மிக அரிதானதாகவே காணப்படுகின்றன. மனிதர்கள் இன்று பல்வேறு தேவைகளுக்காக பிற விலங்குகளைக் கொல்கின்றனர் அல்லது துன்புறுத்துகின்றனர். அதாவது உணவிற்காக, ஆய்வு கூடச் சோதனைகளுக்காக, கேளிக்கை நிகழ்வுகளுக்காக மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் வேள்விக்காக பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் துன்புறுத்தியும் கொன்றும் வருவதன் மூலம் மனிதரல்லாத விலங்குகளிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர். அதுமட்டுமன்றி இன்று தொழிற்சாலைகளில் வியாபாரத்திற்காக விலங்குகளினை உணவுக்காக உற்பத்தி செய்வது வழமையாக உள்ளது. இவ்வியாபாரத்தில் மனிதரல்லாத விலங்குகள் பல்வேறு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்;றன. ஆனால் உற்பத்தியாளர்களோ, அரசாங்கமோ அல்லது அவற்றினை உண்பவர்களோ மிருகங்களின் உணர்வைப் பற்றி அதிகம் கவலைப்படுவது இல்லை. காரணம் உற்பத்தியாளர்கள் மிருகங்களை உயிர் அற்ற பொருட்கள் போலவே கருதி உணவுப் பொதியாக்கி விற்பனை முகவர்களுக்கு அனுப்புகின்றார்கள். அரசாங்கங்கள் இச்செயற்பாட்டின் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் உணவு தேவை கருதி மிருகவதை பற்றி அக்கறை காட்டுவதில்லை. உணவு உற்பத்தியில் இருத்து விலகி வாழும் மக்களுக்கு உணவு எப்படி தங்களை வந்தடைகின்றது என்பதில் அக்கறையும் இருப்பதில்லை. இவ்வாறான செயல்கள் ஒழுக்க மெய்யியலில் அங்கீகரிக்கக் கூடியனவா என்பது வாதத்திற்குரிய ஓர் விடயமாகும். இவற்றை தெளிவு படுத்துவதாகவே இவ் ஆய்வு அமைகின்றது. இக்கட்டுரையானது பகுப்பாய்வு முறையியல், ஒப்பீட்டு முறையியல், வரலாற்று முறையியல் என்பனவற்றின் துணைகொண்டு வடிவமைக்கப்படுவதுடன் இக் கட்டுரைக்கு வேண்டிய தரவுகளானவை முதல் நிலைத்தரவு, இரண்டாம் நிலைத்தரவுகளினூடாக பெறப்படவிருக்கிறது. முதல்நிலைத் தரவுகளானவை கட்டுரையாளனால் நேரடியாக அவதானிக்கப்பட்ட விடயங்களுடனும் விலங்குகளது நலன் குறித்தப்பேசும் சமூக ஆர்வலர்களுடனான கலந்துரையாடல் மூலமாகவும் பெறப்பட்டவுள்ளது. இரண்டாம் நிலைத்தரவுகளானவை விலங்குகளது உரிமைகள் தொடர்பான ஒழுக்க மெய்யியலாளர்களின் நூல்களினூடாகவும் இந்த ஆய்வுடன் தொடர்புடைய சில சமூக நிறுவனங்களின் தரவுகள் மற்றும் உள்ளூர் பத்திரிகைக் கட்டுரைகள்; மூலமும் பெறப்பட்டுள்ளன.