Abstract:
சம்ஸ்கிருதமொழி இந்தியாவின் தொன்மையான மொழி. நாலாயிரம் வருஷ வரலாறு இம்மொழிக்கு உண்டு. இந்தோ - ஐரோப்பிய இலக்கியத்தில் எஞ்சியிருக்கும் இலக்கியப் பரப்பில் மிக விரிவானது சம்ஸ்கிருதமொழியே ஆகும். இருக்கு வேத இலக்கியம் தரும் வேதப் பிரார்த்தனைகள் இம்மொழியின் முதல் இலக்கியம். தொன்மையுடன் தொடர்ச்சியாக வளர்ச்சியும் பெற்ற அம்மொழியை பல்வேறு கவிஞர்கள் பல்வேறு இலக்கிய வகைகளூடாக ஜனரஞ்சகப்படுத்தியுள்ளனர். இவ்வகை இலக்கியங்களை அறிந்து கொள்ளும் இலக்கியக்கொள்கை நுட்பங்களை காவியவியலாளர்கள் பலர் வளம்படுத்தியுள்ளனர். காவியவியலாளர்கள் எனும் தன்மையினாலும் ஒரு காவிய விமர்சகர் எனும் நிலையாலும் உயர்ந்த புலமைத்துவத்துடன் இலக்கியச் செல்நெறியையும் தனது புலமைத்துவத்தையும் வெளிப்படுத்தி சமஸ்கிருதமொழியை வளம்படுத்தியோர் வரிசைகளில் உரையாசிரியர்களின் பங்கு மகத்தானது. இத்தகைய பங்களிப்புக்களை நல்கியவர்களுள் ஒருவர் மல்லிநாதர் ஆவார். சம்ஸ்கிருத காவியவியலின் சிறப்புக்களையும், திறனாய்வுத் தன்மைகளையும் இலக்கிய இலக்கண யாப்பியற் புலமைகளையும் வெளிக்கொணர்ந்த சிறப்பு மல்லிநாதர் உரையின் தனித்துவமாகும். இவ்வகையில் மகாகாவியங்களான ரகுவம்சம், குமாரசம்பவம், கிராதார்ஜுனீயம், சிசுபாலவதம், பட்டிகாவியம் என்பனவற்றிற்கும், காளிதாசரது கண்ட காவியமாகிய மேகதூதத்திற்கும் உரை எழுதியுள்ளார். வேறு உரைகளையும் ஆக்க இலக்கியங்களையும் இயற்றியுள்ளார். இத்தகைய சிறப்புடைய மல்லிநாதரின் இலக்கியப்பணி சம்ஸ்கிருத இலக்கியத்தை உயர்வுபடுத்தவும் இனங்காணவும் முன்னுதாரணமாகக் கொள்ளப்படுகின்றது. அதேவேளை மல்லிநாதர் வாழ்க்கை வரலாறு, சம்ஸ்கிருதமொழி வளர்ச்சிக்கு ஆற்றிய பங்குகளும் பணிகளும் சம்ஸ்கிருத இலக்கிய வரலாற்றில் இடம்பெறவில்லை என்பதோடு சம்ஸ்கிருத உரையாசிரியர் வரலாற்றை எழுதவேண்டிய தேவையையும் ஆய்வுப்புலத்தையும் ஏற்படுகின்றது.