dc.description.abstract |
இருவேறு மொழி இலக்கியங்களுக்கிடையிலான உறவுகளை ஒப்பிட்டாராயும் ஓர் அறிவியல் பூர்வமான ஆய்வியல் முறையே ஒப்பிலக்கியம் என வழங்கப்படுகின்றது. அது தனக்கெனத் தனித்துவமான வரன்முறைகளையும் கோட்பாடுகளையும் கொண்டதொரு ஆய்வியல்; புலமாக இன்று வளர்ந்துள்ளது. தமிழினைப் பொறுத்தமட்டில்; இலக்கியங்களை ஒப்பிட்டு நோக்கிக் கருத்துரைக்கும் பண்பு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காணப்பட்ட போதும் இருபதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியிலிருந்தே ஆய்வு முறையியலுக்குட்பட்ட ஒப்பியலாய்வாக அது வளரத்தொடங்கியது. ஒப்பியலாய்வு தமிழில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியினைக் கண்டுள்ள நிலையில் அதன் சமூகப் பங்களிப்புப் பற்றிச் சிந்திப்பது மிகவும் அவசியமானதாகிறது. துரதிஷ்டவசமாகப் பல ஆண்டுகாலமாகத் தமிழில் நிகழ்ந்த கணிசமான ஆய்வுகள் இரசனையனுபவ நோக்கில் அமைந்து விட்டன. எனினும் கடந்த சில தசாப்தங்களாக ஒப்பியலாய்வினைப் புதிய சமூகத் தேவைகளை எதிர்கொள்ளக் கூடியவகையில் வளர்த்தெடுப்பது பற்றியும் அதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றன. மேலும் பிரதேசங்கள், நாடுகள், சமூகங்கள் என்பவற்றின் பிரத்தியேகமான தேவைகளை அறிந்து அதற்கேற்ற வகையில் ஒப்பிலக்கியக் கோட்பாடுகளையும் அணுகுமுறைகளையும் மாற்றியமைப்பது தொடர்பாகவும் ஆய்வுகள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் போருக்குப் பின்னதாக இன நல்லிணக்கம் என்னும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் இலங்கையின் சமகாலத் தேவைகளை எதிர்கொள்ளக் கூடிய ஒப்பிலக்கிய ஆய்வு அணுகுமுறைகள்; குறித்து ஆராய்வது மிக அவசியமாகின்றது. இலங்கை பல ஆண்டுகாலமாக இன நெருக்கடியினைச் சந்தித்து வருவதை யாவரும் அறிவர். காலனித்துவவாதிகள் ஏற்படுத்திய பிரித்தாளும் தந்திரம் காலப்போக்கில் இன முரண்;பாடுகளாக வடிவெடுத்து இனப்பிரச்சினைகளாகி பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறியது. சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்டத்தால் இலங்கை சீரழிவினைச் சந்தித்தது. போர் என்பது இன்று முடிவுக்கு வந்துவிட்டது. அதனால் இனங்களிடையே ஒற்றுமையும் புரிந்துணர்வும் ஏற்பட்டு விட்டது எனக் கருத முடியாது. பல ஆண்டுகாலமாக மக்கள் மத்தியில் வளர்க்கப்பட்டு வந்த இனமுரண்பாடுகள் இன்றும் காணப்படுகின்றன. இவ்வின முரண்பாடுகளை நீக்கி இனங்களிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்த ஒப்பிலக்கிய ஆய்வினூடகப் பங்களிப்பினை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும். இந்த ஆய்வு விவரண ஆய்வு முறையியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. இதுவரைகாலமும் தமிழில் நிகழ்ந்து வந்து ஒப்பிலக்கிய ஆய்வுகள் மற்றும் ஆய்வு முறைகள் இங்கு விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுவதுடன் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற நாடுகளிலும், பல்லின, பன்மொழி பேசும் மக்களைக் கொண்ட நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வரும் ஒப்பியலாய்வு அணுகுமுறைகளுடனும் அவை ஒப்பிட்டாராயப்படுகின்றன. பின்காலனித்துவக் கண்ணோட்டத்தில் ஒப்பிலாய்வு குறித்து ஒப்பியலாய்வாளர்கள் அண்மைக்காலமாக முன்வைத்து வரும் கருத்துக்களும் பரிசீலிக்கப்படுகின்றன. அதன் பின்னணியில் இலங்கையின் நிகழ்காலச் சமூகத் தேவைகளை எதிர் கொள்ளக்கூடிய ஒப்பியலாய்வு முறைகளை எங்ஙனம் வளர்த்தெடுப்பது என்பது குறித்துப் பிரேரிக்கப்படுகின்றது.
ஒப்பிலக்கிய ஆய்வுகள் இருவேறு மொழி இலக்கியங்களை இணைத்து நிகழ்த்தப்படுவதால் இன, மொழி ரீதியாகப் பிளவுபட்டிருக்கும் இலங்கைச் சமூகத்தில் இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்தக் கனதியான பங்களிப்பினை நல்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலனித்துவ ஆதிக்கத்தின் கீழிருந்து விடுதலை பெற்றவையும் பல்லின, பன்மொழி பேசும் மக்களைக் கொண்டிருப்பவையுமான நாடுகள் சிலவற்றில் அண்மைக் காலமாக நிகழ்ந்து வரும் ஒப்பிலக்கிய ஆய்வுகளும், அவர்கள் கையாளும் ஒப்பியலாய்வு அணுகுமுறைகளும் இலங்கையிலும் அவை சாதகமான பயன்களை விளைவிக்கும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. எனினும், இலங்கை நாட்டின் தற்போதைய தேவைகள், எதிர்பார்ப்புக்கள் என்பவற்றிற்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் ஒப்பிலக்கிய அணுகுமுறைகள் மாற்றியமைப்பட்டால் மட்டுமே எதிர்பார்க்கும் நன்மைகளை அடைய முடியும். ஆகையினால் 'இலங்கை ஒப்பிலக்கியம்' என்னும் எண்ணக்கருவினை வளர்த்தெடுப்பதனூடாக ஒப்பிலக்கிய ஆய்வுகளைச் சமூகப் பயனுள்ளதாக்கி இன நல்லிணக்கம் என்னும் நோக்கை இலகுபடுத்திக் கொள்ளலாம். |
en_US |