Abstract:
சமஸ்கிருத காவியவியற் கோட்பாடுகளில் ஆரம்பக் கோட்பாடுகளில் ஒன்றாக விளங்குவது அலங்காரக்கோட்பாடு. இலக்கியம் படைப்பவனுக்கு பொருள் வெளியீட்டு உத்தியையும், இலக்கியம் சுவைப்பவனுக்கு பொருள் கொள்ளும்; உத்தியையும் உணர்த்துவதால் அணியிலக்கணம் தனியிடம் பெறுகின்றது. 'உபமா காளிதாஸஸ்ய' என்பது கவியுலக வழக்கு. அவரது த்ருஸ்ய காவியங்களும் (நாடகங்களும்) ச்ரவ்ய காவியங்களும் சொல்லணி;, பொருளணி என்பவற்றால் அலங்கரிக்கப்பட்டவை. காளிதாஸர் பரதருக்கும் (கி.மு 2ம் நூற்றாண்டு - கி.பி 2ம் நூற்றாண்டு) காவியதாச ஆசிரியர் தண்டிக்கும் (கி.பி 6ம் நூற்றாண்டு;)இடைப்பட்டவர். பரதரால் நாட்டிய சாஸ்திரத்தில் ஐந்து வகை உவமைகளும், நான்கு வகை அலங்காரங்களும் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. பரதருக்குப் பிற்பட்டகாலத்தில் பல்கிப்பெருகிய அலங்காரங்களுக்கு காளிதாஸரின் இலக்கியச் சிந்தனைகள் ஊற்றாக விளங்கின. பிற்கால அலங்கார சாஸ்திர ஆசிரியர்களால் விதந்துரைக்கப்பட்ட பல்வேறு வகையணிகள் அபிக்ஞான சாகுந்தலத்தின் ஊடாக வெளிப்படுத்தப்படுகின்றமை இவ்வாய்வுக்கட்டுரையிலே எடுத்துக் காட்டப்படுகின்றது. அபிக்ஞான சாகுந்தலத்தில் ஏழு அத்தியாயங்களிலும் செய்யுட்களிலும் உரைநடையிலும் காணப்படும் அணிகள் பகுக்கப்பட்டு அவை அலங்காரக் கோட்பாட்டாளர்களின் வரைவிலக்கணத்துடன் தரப்படும.; அணிகளுக்கும் பிற கோட்பாடுகளான ரசம், த்வனி போன்றவற்றிற்கும் இடையே உள்ள தொடர்பும் கவி உணர்த்த விரும்பும் விடயங்களும் எடுத்துக்காட்டப்படுகின்றன. ஒவ்வொரு அத்தியாயங்களிலும் உள்ள அணிகள் முறையே எவ்வகையைச் சேர்ந்தவை என பகுக்கப்படுகின்றன (பகுப்பாய்வு). அவற்றுக்கான விளக்கங்கள் தரப்படுகின்றன (விவரணவியல் ஆய்வு). பிற்கால காவியவியலாளர்கள் சிலர் காளிதாஸரது அபிக்ஞான சாகுந்தலத்திலிருந்து தமது அணிக்கோட்பாட்டை விளக்க எடுத்தாண்ட செய்யுட்கள் தரப்படுகின்றன. காளிதாஸரது கற்பனையின் உயிர்மூச்சாக அணிகள் விளங்குகின்றன. உவமை ரூபகம், அர்த்தாந்தரம் என பல பொருளணிகளும், சொல்லணிகளும் அவரது நாடகத்தில் பொருளுக்கேற்றபடி கையாளப்பட்டுள்ளன. பிற்காலத்துக் கவிகளால் கையாளப்பட்ட சித்திரம், யமகம் போன்ற செயற்கையணிகள் அவரது காவியத்தில் இல்லை. அணிகளுடன் தொடர்புடையனவாய் ரசம், த்வனி, குணம் போன்ற அம்சங்களும் அவரது நாடகத்தையலங்கரிக்கின்றன. பிற்கால காவிய கோட்பாட்டாளர்களின் சிந்தனைகளுக்கு அபிக்ஞான சாகுந்தலமும் அவரது மற்றைய காவியங்கள் போன்று சிறந்த சிந்தனை ஊற்றாக விளங்கியது.