Abstract:
இந்திய (கீழைத்தேய) தத்துவச் சிந்தனை வளர்ச்சியில் சைவசித்தாந்தத் தத்துவம் சிறப்பிடம்பெற்று விளங்குகின்றது. சித்தாந்தத் தத்துவ வளர்ச்சி மற்றும் அதன் அடிப்படை உண்மைகளை விளக்குவதற்கு திருமுறைகளும் குறிப்பிடத்தக்கதொன்றாக விளங்குகின்றன. குறிப்பாக இறைவன் - இறைவனது வியாபகம், இயல்புகள், இலக்கணங்கள், ஆன்மா - ஆன்மாவின் உண்மைத்தன்மை, அதன் வகைகள், ஆன்மாவைப் பீடிக்கும் மலங்கள், முத்தி - முத்தியின் வகைகள், திருவருட்சக்தி தொடர்பான கருத்தியல் விளக்கங்கள் திருமுறைகளில் எடுத்துக்கூறப்படுவதனால் அவை சைவசித்தாந்தத் தத்துவ சிந்தனைகளுக்குரிய அடிப்படைகளாகக் கருதப்படுகின்றன. இத்திருமுறைகளில் மேற்கூறப்பட்ட கருத்தியல்கள் தொடர்பாகப் பலரது விளக்கங்கள்இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவற்றுள் திருநாவுக்கரசரது நிலைப்பாடு ஆணித்தரமானதாக விளங்குகின்றது. குறிப்பாக அவரது தனிப்பட்ட வாழ்வு, சமூக நிலைப்பாடு மற்றும் அவைதிக சமயம் குறித்த எதிர்மறைக் கருத்தியல்கள் போன்றன சைவசித்தாந்தத் தத்துவம்சார் அதிலும் குறிப்பாக இறையிருப்பு தொடர்பான உண்மைத்தன்மையினை மேலும் வலுப்படுத்தியிருக்கின்றது. இதனை அவர் தமது பதிகங்களினூடாக வெளிப்படுத்தியிருக்கின்றார். இதனடிப்படையில் நாவுக்கரசரது பதிகங்களை ஆய்வு எல்லையாகக்கொண்டு சைவசித்தாந்தம் காட்டும் இறையிருப்புக் குறித்த நிறுவல்கள் அவரது பதிகங்களில் எங்ஙனம் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது பற்றி ஆராயப்பட்டுள்ளன. இவ்வாய்வானது வரலாற்று ரீதியிலான அணுகுமுறை, விபரண முறை மற்றும் பகுப்பாய்வு முறை போன்ற முறையியல்களை அடிப்படையாகக்கொண்ட ஆய்வாக அமைந்துள்ளது.