Abstract:
சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டிருந்தாலும் பத்தொன்ப தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. அச்சில் பதிப்பிக்கப்படும்வரை தமிழகத்தில் இந்நூல் பற்றிப் பலரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் ஈழத்தவர்கள் கி.பி. 15ஆம் நூற்றாண்டிற்கும் 17ஆம் நூற்றாண்டிற்கும் இடைப் பட்ட காலப்பகுதி யிலேயே சிலப்பதிகாரம் பற்றி அறிந்திருந்தனர். இக்காலப்பகுதியிலேயே ஈழத்தவர்களால் கண்ணகியின் கதை காவியமாகப் பாடப்பட்டது. இளங்கோ கண்ணகியைச் சாதாரண மானிடப் பெண்ணாகப் படைத்து - வாழ்வில் இன்பம் காணவைத்து இறுதியில் தெய்வீகத்தன்மை உள்ளவளாகப் படைத்துள்ளார். ஆனால் ஈழத்தவர்கள் கண்ணகையைத் தீண்டத்தகாத கற்புடையவளாகவும். அவதாரமாகவும் படைத்ததால் - அவள் இல்லற வாழ்வில் இன்பம் காண்பவளாக இருக்கவில்லை. இறுதிவரை தெய்வீகப் பெண்ணாகவே காணப்படுகிறாள். இதனால் இளங்கோவின் கண்ணகியும் ஈழத்துக் கண்ணகையும் வேறுபாடுகளைக் கொண்டவர்களாக உள்ளனர்.