Abstract:
வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறிகளை வகுத்துக்காட்டும் திருக்குறள், இலக்கியம் என்னும் நிலையில் மட்டும் நின்றுவிடாமல். மனித வாழ்வியல் கூறுகளைத் திருத்தும் கருவியாகவும் உள்ளது. இதனாலேயே குடும்பம், சமுதாயம், அரசியல், பொருளாதாரம் எனப் பல்வேறுபட்ட வாழ்வியல்சார் நல்லறங்களைப் போதித்து, பேண்தகு சமூகத்தை உருவாக்க முனைந்துள்ளது. இங்கு உலகத்தாருக்குப் பொதுவான இறைதத்துவக் கோட்பாடுகள் பேசப்பட்டுள்ளன. சமூகத்தை மாற்றும் கல்வியின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீதியான பொருளாதார முறைமையும் பேசப்பட்டுள்ளது. அறமற்ற வழியில் பொருள் சேர்த்தல் தவறு என்று மக்களுக்கு உணர்த்தி, சரியான முறையில் பொருளீட்டும் முறைமையும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வள்ளுவம் பேசிய அரசியல்நெறிகள், அக்காலத் தேவை கருதிச் சொல்லப்பட்டாலும் எக்காலத்துக்கும் பொருந்துவனவாய், எந்நாட்டு அரசியல் அணுகுமுறைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன. உலகில் சமூக மேம்பாட்டு வளர்ச்சிநிலைகளின் அவசியம் கருதிய வள்ளுவர், அவைசார்ந்த கருத்துக்களை முன்வைப்பது பேண்தகு சமூக அபிவிருத்தி நோக்கிய பார்வையிலேயே ஆகும். எனவே சமுதாயம் மேம்பாடு அடைவதற்கான வழிமுறைகளை வள்ளுவத்தின்வழி அடையாளப்படுத்தும் அடிப்படை விவாதத்தையே இவ்வாய்வு முன்வைக்கிறது. இவ்வாய்வில் வள்ளுவரின் திருக்குறள் பிரதி முதன்மைத்தரவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் பண்புசார் மற்றும் விபரணப் பகுப்பாய்வு முறைகள் பிரயோகிக்கப்பட்டு, சமூகவியல் மற்றும் அறவியல் கோட்பாட்டு அணுகுமுறைகளோடு விமர்சன நோக்குநிலையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது