Abstract:
சமாதானம் என்பது தனிநபர், சமுதாயம் மட்டுமன்றி உலகளாவிய அளவிலும் அமைதியான நிலையைப் பெற்று நீடிக்கச் செய்யும் அடிப்படைக் கருதுகோளாகும். இத்தகைய சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் மெய்யியல் ஆற்றுப்படுத்தல் அதிலும் குறிப்பாக தர்க்க ஆதார சிகிச்சை முக்கியபங்கு வகிக்கின்றன. மெய்யியல் ஆற்றுப்படுத்தலானது தனிநபர்களின் சிந்தனை மற்றும் நம்பிக்கைகளைத் தர்க்க ரீதியாகச் சிந்திக்க ஊக்குவிப்பதன் மூலம் மன அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்க உதவுகிறது. தரக்க ஆதார சிகிச்சையானது மனித மனதிலுள்ள தவறான நம்பிக்கைகள் காரணமாக ஏற்படும் மன அழுத்தம், புரிதலின்மை,கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகளை மாற்றுவதன் மூலம் தனிநபர் மனப்பாங்கை சமநிலையில் கொண்டுவரும் மெய்யியல் ஆற்றுப்படுத்தல் முறையாகும். இவ்வாய்வானது உலகமயமாக்கல், கலாசார மாறுபாடு மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற சமகால சூழல்களில், மெய்யியல் ஆற்றுப்படுத்தல் எனும் அடிப்படையில் தர்க்க ஆதார சிகிச்சை சமாதானத்தை நிலைநாட்ட எவ்வாறு உதவுகின்றது என்பதை ஆய்வுக்குட்படுத்துகின்றது. தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள், மன அமைதியை ஊக்குவித்தல், மோதல்களை குறைத்தல், மற்றும் சமூக சமாதானத்தை வளர்த்தல் ஆகியவற்றில் இம்முறைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை தெளிவுபடுத்துன்றன. இதனால் சமுதாயத்தில் வன்முறை குறைந்து பரஸ்பர மரியாதை மற்றும் நீதி ஆகியவைகள் மேம்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாய்வு, தர்க்க ஆதார சிகிச்சை மூலம் தனிநபர் மற்றும் சமூக சமாதானத்தை மேம்படுத்துவதற்கான வழிகளையும், எதிர்காலத்தில் இதைப் பயன்படுத்தி சமுதாயத்தில் சமாதானத்தை உருவாக்குவதற்கான முக்கியமான அடித்தளமாகவும் அமைகிறது. எனவே இவ்வாய்வானது சமாதானத்தின் முக்கியத்துவத்தையும் அதனைக் கட்டியெழுப்புவதில் தர்க்க ஆதார சிகிச்சையின் பொருத்தப்பாட்டினையும் ஆராய்கிறது. இவ்வாய்வானது இரண்டாம் நிலைத் தரவுகளை அடிப்படையாகக்கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளதால் ஆய்விற்கான தரவுகள் ஆய்வு நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், சஞ்சிகைக் குறிப்புக்கள், இணையத்தளப் பதிவுகள் என்பவற்றிலிருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளதோடு ஆய்விற்கான முறைகளாக வரலாற்று ரீதியான அணுகுமுறை, விபரண ரீதியான அணுகுமுறை மற்றும் விமர்சனப் பகுப்பாய்வுமுறை என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன