Abstract:
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இந்தியக் குடியரசின் பதினோராவது குடியரசுத் தலைவராகவும், ஒரு மூத்த பாதுகாப்பு விஞ்ஞானியாகவும் விளங்கினார். அவரது சுயசரிதையான ‘அக்னிச் சிறகுகள்' ராமேஸ்வரம் மகனாகப் உரிமையாளரின் என்ற தென்னிந்திய கிராமத்தில் ஒரு பிறந்து; பாதுகாப்பு படகு விஞ்ஞானியாகவும் இந்திய ஜனாதிபதியாகவும் நன்கு அறியப்பட்ட அவரது வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. அறிவாராய்ச்சியியல் நோக்கில் ஆழமாகப் பார்த்தால் அந்த நூல் அறிவைப் பற்றிய அதன் ஆழமான கட்டமைப்பைப் பற்றிய உரையாடல்களை அல்லது கதைகூறல்களைக் கொண்டிருப்பது புலப்படும். இந்தவகையில் இந்த ஆய்வு, இலக்கியங்களில் மெய்யியற் சிந்தனைகளை அடையாளப்படுத்துகின்ற ஒரு முயற்சியாக அக்னிச் சிறகுகள் முன்வைக்கின்ற அறிவாராய்ச்சியியற் சிந்தனைகளை அடையாளப்படுத்துவதாக அமைகின்றது. அறிவாராய்ச்சியியலானது அறிவு என்பதனை வரையறை செய்வதனைப் பிரதான இலக்காகக் கொண்டதும் அறிவு மற்றும் நம்பிக்கையின் இயல்புகள், எல்லைகள் மற்றும் அறிவதற்கான வழிகள், அவற்றின் வலிதான தன்மை போன்ற பிரச்சினைகளுடன் தொடர்புடையதுமான மெய்யியலின் ஒரு கிளை. அந்த நோக்கில் அக்னிச் சிறகுகளை அணுகும் போது அது அறிவு பற்றிய கருத்தாக்கங்களைக் குறிப்பாக உள்ளுறை அறிவு, சுய-அறிவு, உலக அறிவு. கடவுள்- அறிவு போன்ற பல்வேறு உரையாடல்களை முன்னிறுத்துவதனை இனங்கண்டுகொள்ள முடியும். அக்னிச் சிறகுகள் அறிவின் அதிகாரம் மற்றும் சக்தியை மையமாகக் கொண்ட ஒர் "அறிவு பற்றிய அறிக்கை' ஆகும். அறிவைப் பெறுவதற்கான முறையான மற்றும் முறைசாரா வழிகள் இரண்டும் முக்கியமானவை எனக் குறிப்பிடும் டாக்டர் கலாம் ஒரு மனிதன் முழுமை பெற சுய-அறிவு. உலக அறிவு, மற்றும் கடவுள் அறிவு ஆகிய மூன்றும் அவசியம் என்பதனைத் தன் சொந்த வாழ்வின் கதைகூறல் ஊடாக உணர்த்தி நிற்கின்றார். அவரைப் பொறுத்தவரை கடவுள் தன்னை வெளிப்படுத்த மனிதர்களைப் படைத்தார். ஒவ்வொரு தனிநபருக்கும் ஒரு பணி உள்ளது. எனவே மனிதர்கள், உலகம் மற்றும் கடவுள் ஆகியவை பிரிக்க முடியாதவை. அவை மூன்று விதமான அறிவுகள் அல்ல. அவை இந்த மூலத்தின் மூன்று வழிகள்/பாதைகள் என்கிறார். டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அக்னிச் சிறகுகள் ஒரு தனித்துவமான அறிவாராய்ச்சியியல் பார்வையை வழங்குகிறது. இது அவரது மெய்யியல், உளவியல் மற்றும் ஆன்மீக கருத்துக்கள் வழியாக பிரவாகமடைகின்றது. அவர் தனது சுயசரிதையின் வழி தனித்துவமான அறிவுக் கோட்பாட்டை உருவாக்கினார் என்பதனை இவ்வாய்வு வெளிக்கொணர்கின்றது. ஆய்விற்கான தரவுகள் அக்னிச் சிறகுகளில் இருந்து நேரடியாகவும், அக்னிச் சிறகுகள் தொடர்பான ஏனைய நூல்கள், கட்டுரைகளில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. மேலும் இவ் ஆய்வானது பகுப்பாய்வு முறை, விபரண முறை என்பவற்றின் துணைகொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.