| dc.description.abstract |
திருக்குறள் அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனிதர்கள் தம் அகவாழ்வில் சுமூகமாக வாழவும், புறவாழ்வில்,இன்பமுடனும், இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை அது விளக்குகின்றது.இன்றைய, இந்த உலகில் அரசும், அரசாங்கமும் குடிமக்களுக்கானது என்பதும் அவற்றினுடைய முழுமையான செயற்பாடுகளும் தம் குடிமக்களின் நலனை மையமாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்பதும் எல்லோராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதும், விரும்பப்படுவதுமான கருத்தாகும். அத்தகைய அரசினுடைய நோக்கங்களையும், திட்டங்களையும் மக்களிடம் கொண்டுசேர்க்கின்ற மிகப் பெரிய பணி அரச அலுவர்களிடம் உள்ளது. எனவே அரசினதும் அரசாங்கத்தினும் நோக்கங்களும் திட்டங்களும் சிறப்பானவையாக இருப்பினும் அரச அலுவர்கள் சரியாக இல்லாத சந்தர்ப்பத்தில் அவை தோல்வியடைந்து விடும். அந்தவகையில் அரச அலுவலர் ஒருவரைத் தெரிவுசெய்தல், அவருக்கு இருக்க வேண்டிய மற்றும் ,இருக்கக் கூடாத பண்புகள் பற்றிய விழிப்புணர்வு, அரச அலுவலர்களுக்கும் மக்களுக்குமான உறவு, அரச அலுவலர்களுக்கும் அரசுக்கும், இடையிலான தொடர்பு என்பன பற்றி கவனமெடுத்தல் அவசியமானதாகும்.இத்தகையதொரு பின்னணியில் திருக்குறள் கூறும் அரச அலுவலர்கள் பற்றிய சிந்தனைகளைச் சீர்தூக்கி ஆராய்ந்து அவற்றின் சிறப்பியல்புகளை வெளிப்படுத்துவதோடு சமகால உலகில் அவற்றை மீள்வாசிப்பு செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும், இவ் ஆய்வுக் கட்டுரை அமைகின்றது. இன்றைய இந்த உலகம் பல்வேறு பரிமாணங்களைக் கண்டிருப்பினும், அரச அலுவலர்கள் பற்றிய பல அடிப்படைச் சித்தாந்தங்கள் மாற்றமுறுவதற்கில்லை., இத்தகைய அடிப்படைச் சித்தாந்தங்கள், இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை தமிழர்களின் பாரம்பரிய சிந்தனைகளின் சிறப்பினை எடுத்தியம்புவதாக உள்ளன. திருக்குறள் கூறும் அரச அலுவலகர்கள் பற்றிய சிந்தனைகள் நடைமுறைப் பொருத்தப்பாடுடையனவாக காணப்படும் அதேவேளை, இக்காலத்திற்கும், எக்காலத்திற்கும் நின்று நிலைக்கும் சிறப்பினையும் கொண்டுள்ளன. ஆகையினால்,, இக்காலத்தில் அரச நிர்வாகத்தை செம்மைப்படுத்தவும், அரசாங்க அலுவலர்களை வழிநடத்தவும் திருக்குறள் நிர்வாகக் கோட்பாட்டு நூலாய்ளு தொழில் ஒழுக்கத்திற்கான வழிகாட்டி நூலாய் தேவைப்படுகிறது என்பதனை இந்த ஆய்வு பிரகடணப்படுத்துகின்றது. இவ் ஆய்விற்கான தரவுகள் திருக்குறள் மூல நூலில், இருந்தும், திருக்குறளில் அரச அலுவலர்கள் சார்ந்து வெளியிடப்பட்ட நூல்கள், கட்டுரைகளில், இருந்தும் பெறப்பட்டுள்ளன. மேலும் இவ் ஆய்வானது பகுப்பாய்வு முறை, விபரண முறை, ஒப்பீட்டு முறை என்பவற்றின் துணைகொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
en_US |