Abstract:
இலங்கை வரலாற்றில் 1976ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரைக்கும் இடம்பெற்ற தமிழர், சிங்களவருக்கிடையே) ஆயுதப்போராட்டமானது தமிழ் வரலாற்றில் ஈழப்போராட்ட வரலாறாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2009ஆம் ஆண்டு இப் போராட்டமானது முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும். இன்றும் இந்த யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்ந்தவாறே உள்ளன. யுத்தம் நிறைவடைந்து ஒன்பது ஆண்டுகள் கடந்தும் காணியுரிமை, காணாமல் போனோர் பற்றிய தகவல்கள் கிடைக்காமை, இளவயது திருமணங்கள், பொருளாதார நெருக்கடிகள், குடும்பத்தலைமைத்துவம் போன்ற பல்வேறான பிரச்சனைகள் வடபகுதியில் காணப்படுகின்றன.
இவ்வாறான சூழ்நிலையில் குடும்பத் தலைமைத்துவம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தை கவனித்துக்கொள்வதும், அவற்றினை பராமரித்து பேண வேண்டிய மிகப் பெரிய பொறுப்பை யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வட இலங்கை பெண்கள் ஏற்கவேண்டியதாயிற்று காரணம் யுத்தத்தினால் கணவனின் நோய் மற்றும் அங்கவீனம், கணவனை பிரிந்திருத்தல், கணவன் தடுப்பில் இருத்தல், கணவன் வெளிநாட்டில் இருத்தல், கணவனின் மரணம், வருமானம் தொடர்பில் கணவனின் பங்களிப்பின்மை போன்ற பல காரணங்களினால் வட இலங்கை பெண்கள் குடும்பத்தின் பொறுப்பை தலைமை ஏற்கவேண்டி உள்ளது.
யாழ்ப்பாணத்தில் 29,378 பெண்களும் வவுனியாவில் 5802 பெண்களும், மன்னார்ப்பகுதியில் 6888 பெண்களும், முல்லைத்தீவில் 3294 பெண்களும், கிளிநொச்சியில் 6170 பெண்களும் என மொத்தமாக 54,532 பெண்கள் வட இலங்கையில் குடும்ப தலைமைத்துவத்தை ஏற்றிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. பெண் தலைமைத்துவம் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியிலேயே அதிகரித்து காணப்படுகின்றது என்பதனை கருதுகோளாக கொண்டு, பெண் தலைமைத்துவம் என்பது தமிழ் சமுதாயத்தில் எத்தகைய தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பதனையும் அத்தாக்கத்தின் ஊடாக வடஇலங்கை தமிழ் பெண்களுக்கு தோன்றியுள்ள பிரச்சினைகள், சவால்கள் என்பவற்றை அறிந்து கொள்ளும் நோக்குடனும் இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாய்வுக்கு முதலாம் தரவுகளான, நேர்காணல், கலந்துரையாடல், வினாக்கொத்து போன்ற தரவுகளின் மூலம் வ மாகாணத்தில் காணப்படுகின்ற ஐந்து மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து குடும்பங்கள் வீதம் மொத்தமாக 25 பெண் தலைமைத்துவ குடும்பங்களிடம் இருந்து தரவுகள் சேகரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பாகவும் அக்குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சவால்கள் தொடர்பாக அறிந்து கொள்ளலாம்.
அத்துடன் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் மூலம் பெண்தலைமைத்துவ குடும்பங்களின் விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டாம் நிலை தரவுகளாக யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் காணப்படும் பெண்களின் நிலைமையை வெளிப்படுத்தும் தரவுகளை உடைய நூல்கள், சஞ்சிகைகள், பயன்படுத்தப்படுகின்றன். .இத்தகைய முதலாம், இரண்டாம் தரவுகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற இவ் ஆய்வானது விபரணப்பகுப்பாய்வு ஆய்வு முறையியல் ஊடாக வட இலங்கையை மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.