Abstract:
இலங்கையில் மிக நீண்டகாலகட்ட வரலாற்றின் அடிப்படையில் நோக்கும்போது தமிழர், சிங்களவர் ஆகிய இரண்டு இனங்களும் அரசியல், பொருளதார, சமூக ரீதியாக தத்தம் உரிமையை நிலைநாட்டுவதற்காக போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். ஆயினும் 1976ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழரிடையே தமது உரிமைகளைப் பெறுவதற்காக ஆயுத ரீதியிலான போராட்டங்கள் முனைப்புப் பெறத் தொடங்கின. 2009இல் இப்போராட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. ஏறக்குறைய 30 ஆண்டுகாலப் போரில் பெண்களும் பங்கு கொண்டிருந்தமையானது தமிழ்சமூகத்தில் பெண்கள் பற்றிய நோக்கு மாற்றமடைய ஏதுவாயிற்று. ஆனால் போர் நிறைவடைந்த பின்னர் குறிப்பாக இன்றுவரை வடஇலங்கைத் தமிழ்ப்பெண்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளதைக் காணலாம். விடுதலை போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் இன்றியமையாததாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் 2009 இலிருந்து இன்றுவரை இப்பெண்கள் தம் வாழ்வியலில் பல்வேறு மாற்றங்களுக்கும் பல்வேறு சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. இவற்றைக் கண்டறிவதையும் அவற்றுக்கான தீர்வுகளை முன்வைப்பதையும் ஆய்வுக்கட்டுரை கருத்திற்கொள்கின்றது. குறிப்பிட்ட காலப்பகுதியில் வடஇலங்கைப் பெண்கள் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பல்வேறு துன்பங்களை அனுபவித்தனர். மேலும் அரசியல், பொருளாதார, சமூக ரீதியாகவும் பலபிரச்சனைகளை எதிர்நோக்கினர். இவற்றை வடஇலங்கைப் பெண்கள் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதனை கண்டறிவதே இவ்வாய்வின் நோக்கம் ஆகும். இவ் ஆய்வானது வரலாற்று ஆய்வு முறை, விபரண ஆய்வுமுறை ஆகிய ஆய்வு முறையியல்களைக்கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. இலங்கையின் வடமாகாணத்தை மையப்படுத்தியதாகவும் 2009இலிருந்து இன்றுவரை வடஇலங்கைப் பெண்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் பற்றியதாகவும் இவ்வாய்வு அமைகின்றது. ஈழப்போருக்கு முன்னிருந்த சூழ்நிலையிலிருந்து வடஇலங்கைப் பெண்களின் வாழ்வியல் எவ்வாறு மாற்றமடைந்தது என்பதனை ஒப்பிட்டு விளங்கி கொள்வதற்கும், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வடஇலங்கைப் பெண்கள் எதிர்கொண்ட சவால்களை விளங்கிக் கொள்வதற்கும், அவற்றை எதிரகொள்வதற்குரிய வழிகளைக் கண்டறிவதற்கும். பெண்களின் வாழ்வியல் மாற்றங்கள் யாவை என்பதைத் தெளிவுபடுத்துவதற்கும் இவ்ஆய்வு பெரிதும் பயனுடையதாகும்.