Abstract:
நாட்டார் ஆற்றுகைக் கலைகளின் ஒரு வகையாக நாட்டுக்கூத்துக்கள் காணப்படுகின்றன. இக்கூத்துக்கள் கலைகளை வளர்ப்பதில் முன்னோடியாக விளங்குகின்றன. கூத்துக்களில் இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் இடம்பெறுகின்றமை அதன் சிறப்பம்சமாகும். கூத்துக் கலைகளுக்கும் சமுதாயத்திற்குமிடையே நெருங்கிய தொடர்பிருந்து வந்துள்ளமை அறியத்தக்கது. குறிப்பாக மக்களின் பக்தியுணர்வினை மெருகூட்டுவதாகவும் சமுதாயநலனில் அக்கறையினை ஏற்படுத்துவதாகவும் மக்களிடையே கலையுணர்வைப் புகுத்துவதாகவும் இக்கலைகள் விளங்குகின்றன. இதன்படி கூத்துக்கலைகளில் மிக முக்கியமான மக்கள் கலை வடிவமாகக் காத்தவராயன் கூத்து விளங்குகிறது. ஈழத்தின் வட பகுதியில் பெருமளவு ஆற்றுகை செய்யப்பட்டு வரும் இக்கலைவடிவமானது மாரியம்மன் வழிபாட்டுடன் நெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. இன்னொரு வகையில் கூறுவதாயின் சமூகத்தின் உழைப்புப்போக்கு மற்றும் மதச் சடங்குகளின் அடியாகத்தோன்றி வளர்ந்து வந்த கலையாக இது அமைகிறது. இதனால் சமூகத்தின் அசைவியக்கத்தோடு தொடர்புபட்ட உறவைக்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஆனால் சமகாலத்தில் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் அறிவியல் ரீதியாக ஏற்பட்டு வருகின்ற மாற்றங்கள் இதன் இருப்புப் பற்றிய கேள்விகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இதன் பிரதி, நம்பிக்கை, ஆற்றுகை மற்றும் ஆற்றுகைவெளி முதலிய அம்சங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது கலையினுடைய சமூகத்தின் அடையாள உருவாக்கத்துடனான நெருக்கடியினையும் தோற்றுவிக்கின்றது. இருந்தும் இதுபற்றி ஆழமான கோட்பாட்டு, புலமைத்துவ நிலைப்பட்ட ஆய்வுகள் எதுவும் ஒப்பீட்டளவில் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே இவற்றை இனவரைவியல் மற்றும் அழகியல் கோட்பாட்டு அடிப்படையில் அணுகி இக் கலை வடிவத்தின் அழகியல் அடிப்படைகள் அதன் சமூக முக்கியத்துவம், உடனிகழ் காலத்தில் இக்கலை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான கோட்பாடு, நடைமுறைசார்ந்த அடிப்படைகளை முன்வைப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக இவ்வாற்றுகைக் கலையின் உற்பத்திக் களமான சமூகம் அதன் பண்பாட்டு அடிப்படைகள், நம்பிக்கைகள், சடங்குகள், உலகு பற்றிய பார்வை முதலியவற்றை விளங்கிக் கொள்வதற்கு இனவரைவியல் கோட்பாட்டு அடிப்படைகளும் இக்கலை வடிவத்தின் பிரதி, அதன் ஆக்கக்கூறுகள், வெளிப்பாட்டு முறைகள், இசைக்கோர்வைகள், கலைஞனுக்கும் சுவைஞனுக்குமிடையிலான ஊடாட்டம், சமூகக் கவர்ச்சி முதலிய அம்சங்களை வெளிக் கொணர்வதற்கு அழகியல் கோட்பாட்டு அடிப்படைகளும் ஆதாரமாக விளங்குகின்றன. ஆக, ஓர் இனத்தின் தனித்துவத்தினையும் நாகரிக, பண்பாட்டமிசங்களை அறிந்துகொள்வதற்கும் அதன் அடையாளத்தைக் எடுத்துக்காட்டுவதற்கும் இத்தகைய ஆய்வுகள் இன்றியமை யாதனவாக விளங்குகின்றன.