Abstract:
ஒழுக்கவியற் சிந்தனைகள் மனிதனின் உணர்ச்சிகளையும், செயற்பாடுகளையும் சமநிலைப்படுத்தும் கருத்தியல்களாகும். இச்சிந்தனைகள் தொடர்பாக காலத்திற்குக் காலம் பல்வேறுபட்ட அறிஞர்கள் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். அவர்களுள் கிரேக்க மெய்யியலாளரான அரிஸ்டோட்டிலின் சிந்தனைகள் குறிப்பிடத்தக்கதொன்றாகும். சிறந்த வாழ்க்கை எது? மகிழ்ச்சி எவ்வாறு சாத்தியம்? வாழ்வை மகிழ்ச்சியும் நிறைவுமுடையதாக ஆக்கிக்கொள்வது எப்படி? எனும் அடிப்படையில் அவரது சிந்தனைகள் அமைந்திருந்ததோடு அச்சிந்தனைகள் நடைமுறைசார் அறிவாகக் காணப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அரிஸ்டோட்டிலின் மேற்குறித்த சிந்தனைகள் அவரின் நல்லொழுக்கக் கோட்பாட்டினூடாகத் தெளிவுறுகின்றது. இக்கோட்பாடானது மனித வாழ்வின் இறுதி நோக்கமான
'Eudemonia' என்பதனை முன்மொழிகிறது. அதாவது அதிஸ்டத்தை நோக்கி ஆற்றுப்படுத்தும் ஒரு
செயல் வடிவமாகும். அத்தோடு அவருடைய கோட்பாட்டின் மையக்கருத்தாக 'Golden Mean'
விளங்குகின்றது. இதன்பொருள் மனிதர்கள் எவ்வாறு நல்லொழுக்க மாதிரிகளை அடிப்படையாகக்கொண்டு கற்கின்றனர் என்பதனைப் பற்றி அறிவதோடு நலமான வாழ்க்கை வாழத் தேவையான சிறந்த பண்புகளையும் ஆராய்கிறது. அரிஸ்ரோட்டிலின் மேற்குறித்த சிந்தனைகள் எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தப்பட்டு பின்பற்றப்படுகின்றன என்பது கேள்விக்குறியாகும். இதற்கு தற்கால வாழ்வியல் குறித்த நிலைப்பாடுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும். குறிப்பாக விஞ்ஞான தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அதனூடான பயன்பாடுகள், சமூக ஊடகங்களின் செல்வாக்கு போன்றன நலமான வாழ்க்கையினையும் நற்பண்புகளையும் சர்ச்சைக்குள்ளாக்குகிறது. இதன் உட்கிடை ஏராளமான சமூகப் பிறழ்வுகளேயாகும். இத்தகைய ஒழுக்கத்திற்கு முரணானவற்றிலிருந்து விடுபட்டு
'மண்ணில் நல்ல வண்ணம் வாழவேண்டிய வழிமுறைகளைக் கடைப்பிடித்து ' நடைமுறைப்படுத்துவது காலத்தின் தேவையாகும். எனவே இவ்வாய்வானது அரிஸ்டோட்டிலின் ஒழுக்கவியற் சிந்தனைகளின் முக்கியத்துவத்தினையும் அவற்றின் பொருத்தப்பாட்டினையும் ஆராய்கின்றது. இவ்வாய்விற்கு வரலாற்று ரீதியான அணுகுமுறை, விபரண அணுகுமுறை மற்றும் விமர்சனப் பகுப்பாய்வுமுறை என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.