dc.description.abstract |
இவ்வாய்வானது குருநகர் கிராமத்தின் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர கல்விப் பெறுபேற்றின் தற்கால நிலையினை கண்டறிதல், மாணவர்களின் கல்விப் பெறுபேற்றின் வீழ்ச்சிக்கான காரணங்களினைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்யவதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல் என்பவற்றினை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ் ஆய்விற்கு முதலாம் நிலைத் தரவு மூலங்களாக கலந்துரையாடல்கள், நேர்காணல் மற்றும் நேரடி அவதானிப்பு என்பவற்றின் மூலமும் இரண்டாம் நிலைத் தரவு மூலங்களாகப் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கையின் மூலம் கிராமத்திற்குள் இருக்கும் பாடசாலைகள் தொடர்பான தரவுகள் மற்றும் பாடசாலைகள் ரீதியான பெறுபேற்று தாள்கள், குருநகர் கிராமத்தில் இருந்து வெளியான நுால்கள் போன்றன பயன்படுத்தப்பட்டன. சேகரிக்கப்பட்ட தரவுகள் விபரணப் பகுப்பாய்வினுாடாகவும் காலரீதியான போக்குப் பகுப்பாய்வினுடாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. ஆய்வுப் பிரதேசத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர கல்வியில் சித்தியடைதல் மட்டத்தின் போக்கானது கால ரீதியாக குறைவடைந்து செல்வதுடன் (2013-2022) இவ் வீழ்ச்சிப் போக்கானது கிராமத்து மாணவர்களிடையே பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் ஆடம்பர வாழ்க்கை, பெற்றோர்களின் அலட்சியப்போக்கு, மாணவர்களின் அக்கறை இன்மை, சினிமாக்குள் மூழ்கியிருத்தல், காதல் உணர்வுகளிற்குள் ஆட்பட்டிருத்தல், கல்வியைவிட தனது தந்தையின் தொழிலை தான் செய்வதில் ஆர்வமாக இருத்தல், நாகரிக நாட்டமும் தொலைத்தொடர்பு சாதனங்களின் பாவனையும், நெருக்கமான குடியிருப்பு அமைப்பு, கற்கும் சூழலைக் குழப்பும் களியாட்ட நடவடிக்கைகளும், கொண்டாட்டங்களும், ஆசிரியர் பற்றாக்குறை, மேலதிக வகுப்புகளிற்கு செல்வதற்கு வசதியின்மை, வெளிநாட்டு பயணங்களும், வெளிநாட்டுத் திருமணங்களும், கற்கும் சமூகத்திற்கான போதிய நூலக வசதிகள் இன்மை போன்றவை வீழ்ச்சிக்கான காரணங்களாகக் காணப்படுகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு சித்தியடைதல் மட்டம் மிகவும் குறைவாக உள்ள பாடசாலைகளின் மாணவர்களுக்கு விசேட கற்றல் முறைகளினை வடிவமைத்தல், ஒவ்வொரு கற்றல் நடவடிக்கைகளிலும் மாணவர்களை ஊக்கப்படுத்துதல், பெற்றோர் களிற்கும் மாணவர்களிற்கும் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்துதல், சிறந்த பொது நூலகம் ஒன்றினைக் கிராமத்தில் அமைத்துக் கொடுத்தல், சமூகமானது மாணவர்களின் உடல் மற்றும் உள ரீதியான நலன்களையும் கருத்தில் கொண்டு கற்றல் நடவடிக்கைகளினை முன்னெடுத்தல், மாணவர்களுக்குக் கற்றல் நடவடிக்கைக்கான அமைதியான சூழல் ஒன்றினை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற் றினூாடாகக் கல்வியடைவில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கலாம். |
en_US |