dc.description.abstract |
பசுமை நகராக்கம் என்ற எண்ணக்கரு உலகளாவிய கவனத்தை ஈர்த்து வந்தாலும், சிறிய நகரங்களில், குறிப்பாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் அதன் பயன்பாடு குறைவாகவே உள்ளது. பெரும்பான்மையான நகரங்கள் பசுமை நகராக்க எண்ணக் கருவினை உள்வாங்கிய அபிவிருத்தியினை மேற்கொண்டு வருவதன் மூலம் பல்வேறு நகராக்க சவால்களை வெற்றிகரமாக எதிர்க்கொள்கின்றன. இவ்வாய்வானது மாத்தளை மாநகரசபைப் பகுதியில் காணப்படும் பசுமைப் போர்வையின் இடம் மற்றும் கால ரீதியான மாற்றத்தினை படமாக்கல், மாத்தளை மாநகரசபை பகுதியில் பசுமை போர்வை மாற்றத்திற்கு ஏற்ப பசுமை நகராக்க எண்ணக்கருவினை பிரயோகிப்பதில் உள்ள சவால்களை அடையாளங்காணல், அடையாளம் காணப்பட்ட சவால்களுக்கான தீர்வுகளை முன்வைத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக்
கொண்டு இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசமான மாத்தளை மாநகர சபை பகுதியானது 14 கிராம சேவகர் பிரிவுகளை தன்னகத்தே கொண்ட துரித அபிவிருத்தியடைந்து வரும் நகரமாகும். வீட்டுவசதி, போக்குவரத்து, கழிவகற்றல், சுகாதாரம், சுத்தமான நீருக்கான அணுகல் மற்றும் பசுமையான இடங்கள் தொடர்பான பல்வேறு சவால்களுக்கு அடிப்படையான, சனத்தொகை அடர்த்தி மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட நகர உட்கட்டமைப்பு என்பவை இவ்வாய்வின் பிரச்சினையாகும். வ்வாய்வில் முதலாம் நிலைத் தரவுகள் மாநகர சபை, பிரதேச செயலகம், தனியார், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உத்தியோகத்தவர்களிடம் நேர்காணல் மூலமும், கள ஆய்வு, இலக்கு குழு கலந்துரையாடல் என்பவற்றின் மூலமும் இரண்டாம் நிலைத் தரவுகள் மாத்தளை பிரதேச செயலக புள்ளிவிபரக் கையேடு, ஆய்வுக் கட்டுரைகள், அறிக்கைகள், இணையம் என்பவற்றில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. இவ்வாய்விற்கான தாவரப்போர்வையின் படமாக்கல் செயற்பாட்டிற்காக Google Earth Satellite Image ஊடாக தரவுகள் பெறப்பட்டு, புவியியற் தகவல் ஒழுங்கின் (GIS) மூலம் படமாக்கப் பட்டுள்ளது. பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளானவை SPSS மற்றும் MS Excel மென்பொருள் உதவியுடன் விபரணப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் விளக்கப்படங்களாகவும், வரைபுகளாகவும், விபரணங்களாகவும் பெறப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவில் 2012 மற்றும் 2024 காலப்பகுதிக்கான தாவரப்போர்வை மாற்றப்படங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன, 2024 உடன் ஒப்பிடும்போது, 2012 மாத்தளை மாநகர சபை மிகவும் ஆரோக்கியமான தாவரப் போர்வையை பிரதிபலிக்கின்றது, தற்போது இப்பகுதி கணிசமான தாவரப்போர்வை இழப்பைச் சந்தித்துள்ளதனை வரைபடங்களை ஒப்பீடு செய்வதன் மூலம் அறிய முடிகின்றது. நகர்ப்புற விரிவாக்கம், உட்கட்டமைப்பு மேம்பாடு இயற்கை தாவரங்களின் இழப்புக்கு பங்களித்திருப்பதை காட்டுகிறது. மேலும் சனத்தொகை அடர்த்தி, நிலப்பற்றாக்குறை, நிதி, அரச கொள்கை, சமூக விழிப்புணர்வின்மை போன்றவை இப் பிரதேசத்தில் பசுமை நகராக்க எண்ணக்கருவினை பிரயோகிப்பதில் உள்ள சவால்களாகக் காணப்படுகிறன. இவற்றினால், வளி மாசு, கார்பன் தடய அதிகரிப்பு, நகர வெப்பத்தீவு உருவாக்கம், சூழற் பல்வகைத்தன்மை இழப்பு, சுகாதாரப் பாதிப்பு, நுண்காலநிலையில் தாக்கம், கழிவகற்றல் பிரச்சனைகள் போன்ற விளைவுகளுக்கு மக்கள் முகம் கொடுக்கின்றனர். இவ்வாறான விளைவுகளைக் குறைத்துக் கொள்வதற்குப் பசுமை கட்டிட விதிமுறைகள் பேணப்படல், பொதுப் போக்குவரத்தை ஊக்குவித்தல், பசுமையான இடங்களை அதிகரித்தல், கழிவு முகாமை மற்றும் மீள்சுழற்சி முயற்சிகளை அதிகரித்தல், சுற்றுச்சூழற் கல்வி மற்றும் விழிப்புணர்வு, சூழல் நட்பு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குதல் போன்றவை பசுமை நகராக்க எண்ணக்கருவின் பிரயோகத்திற்கான வாய்ப்புக்களை வழங்குகின்றன. |
en_US |