Abstract:
யாழ்மாவட்டத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் உற்பத்தி நடவடிக்கைகளில் ஒன்றாக பனை வளம் சார்ந்த உற்பத்திகள் காணப்படுகின்றன. பனை வளம் சார்ந்த பொருட்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலில் உற்பத்தியாளர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு பனை வளம் சார்ந்த பொருட்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலின் தற்கால நிலைமைகளைக் கண்டறிதல், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலிற்கு சவாலாக உள்ள காரணங்களினை இனங்காணுதல் மற்றும் இச்சவால்களை நிவர்த்தி செய்வதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு முன்னெடுக் கப்பட்டுள்ளது. பனிப்பந்து மாதிரியெடுப்பு முறை மூலம் இப்பிரதேசத்தில் பனை வளம் சார் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் உற்பத்தியாளர்களில் நூறு உற்பத்தியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அரைக் கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்து மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டன. பனை அபிவிருத்திச் சபை உற்பத்தி முகாமையாளர், வேலணை பனை தென்னை அபிவிருத்திச் சங்கத் தலைவர் மற்றும் செயலாளர், வேலணை பிரதேச செயலக சிறு கைத்தொழிற் பிரிவிற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர், முன்னாள் பனை அபிவிருத்தி சங்க உறுப்பினர், கிராம சேவக உத்தியோகத்தர்கள் மற்றும் பனை உற்பத்தியைக் கொள்வனவு செய்யும் ஏழு நபர்களிடமிருந்து நேர்காணல் மூலமும் முதலாம் நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பனை அபிவிருத்தி சபை அறிக்கைகள், பனை தென்னை அபிவிருத்தி சங்க பதிவேடுகள் மற்றும் வேலணை பிரதேச செயலக பதிவேடுகள் மூலம் இரண்டாம் நிலைத்தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகள் விபரண புள்ளிவிபரவியல் பகுப்பாய்வு மற்றும் காரண விளைவு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையில் ஆய்வுப் பிரதேசத்தில் பெண்கள் அதிகமாக உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாகவும் உணவு சாரா உற்பத்திகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுவதும் உற்பத்தியின் அளவினை அவதானிக்கும் போது சீரற்றதன்மை கொண்டதாகவும் சந்தைப்படுத்தல் முறையானது இடைத்தரகர்களை நம்பி காணப்படுவதும் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் குறைவடைந்து கொண்டு செல்லும் தன்மையும் தற்கால நிலைமைகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் நவீனமயமாக்கம் இன்மை, தொழிலாளர் பற்றாக்குறை, பருவகாலத்திற்க்கு ஏற்ப மூலப்பொருள் கிடைக்கும் தன்மை, நிதி மற்றும் பொருளாதாரக் கட்டுப்பாடுகள், பலவீனமான நிறுவனக் கட்டமைப்பு, சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் உயிராபத்து போன்றன உற்பத்திக்கான சவால்களாகவும் அளவு மற்றும் தரக்கட்டுப்பாடு, தொழில்நுட்ப அறிவின்மை, நவீன உபகரணங்களின் பாவனையின்மை, வரையறுக்கப் பட்ட விநியோக வலையமைப்பு, போதிய சந்தை விலை கிடைக்காமை மற்றும் தொடர்ச்சியான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் இன்மை போன்றன சந்தைப்படுத்தலுக்கான சவால்களாகவும் இனங் காணப்பட்டுள்ளன. இதற்கான பரிந்துரைகளாக நுகர்வோரின் விருப்பத்திற்கு அமைய உற்பத்தி நடவடிக்கைகளினை மேற்கொள்ளல், மதிப்புக் கூட்டுதலில் கவனம் செலுத்துதல், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பினை ஊக்குவித்தல், உயிர் ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள மரம் ஏறுபவர்களுக்குக் காப்புறுதித் திட்டங்களை வழங்குதல், உற்பத்தியின் அளவினை அதிகரிக்க உற்பத்தியாளர்கள் ஒன்றாக இணைந்து செயற்படல், சந்தைப்படுத்தலினை மேம்படுத்த நவீன தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடகங்களினை பயன்படுத்துதல் போன்றவற்றின் ஊடாக உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் சவால்களினைக் குறைத்துக்கொள்ள முடியும்.