Abstract:
இலங்கையின் உலர்வலயப் பரப்பளவினைப் பொறுத்த வரையில் அதன் நீர்வளம் தொடர்பான ஆய்வுகள் பாரியவிலான முக்கியத்தவத்தினைப் பெற்று வருகின்றன விவசாயம், வீட்டுப்பாவனை போன்ற பல நோக்கங்களுக்காக நீர்த்தேவையானது பல தசாப்தங்களாக அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது இலங்கையின் உலர்வலயமானது நீர்வளப்பயன்பாட்டைப் பொறுத்த வரையில் பிரச்சினையை எதிர்நோக்கும் பகுதியாக உள்ளது இதில் குறிப்பாக வடமாகாண ஆற்று வடிநிலங்களின் நீர்ப்பயன்பாடு நீண்ட காலமாக பிரச்சினைக்குரியதொன்றாகவே காணப்படுகின்றது இந்த வகையில் வடமாகாணத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததும், மிகப் பெரியதுமான ஆற்று வடிநிலமாக கனகராயன் ஆற்று வடிநிலம் விளங்குகின்றது. இவ் ஆற்றுவடிநிலம் தன்னகத்தே கொண்டிருக்கும் வளவாய்ப்புக்களை இனங்காணல், இவ்வடிநிலத்தில் காணப்படும் நிகழ்காலத் தடைகளைக் களைந்து எதிர்கால விருத்திக்கான வாய்ப்புக்களை ஆராய்ந்து இன்றைய காலகட்டத்தில் இவ்வடிநிலம் சார்ந்த அபிவிருத்தி திட்டமிடுதலில் புதிய ஆலோசனைகளை வழங்குதல் ஆகியவை இவ்ஆய்வின் நோக்கங்களாக உள்ளன. இவ் ஆய்விற்காக பொருத்தமான பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டு தேவையான தரவுகளும், தகவல்களும் பெறப்பட்டுள்ளன. இவ் ஆய்விற்காக முதலாம் நிலைத் தரவுகளும், இரண்டாம் நிலைத் தரவுகளும் பல்வேறு நுட்பமுறைகளுக்கு ஊடாகப் பெற்றுக் கொள்ளப்பட்டன. இவ் ஆய்விற்காக பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்காக விபரண ரீதியான புள்ளிவிபரநுட்பமும் (Descriptive Statistics) அனுமான புள்ளி விபர நுட்பமும் (Inferential Statistics) பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வுப் பிரதேசத்தில் காணப்படும் விவசாய நிலப்பயன்பாடுகள், பொருளாதார நிலைமைகள் போன்றவற்றிற்கு வீதம் (Percentage) கணிக்கப்பட்டுள்ளது இதனைவிட லோற்ன்ஸ் வளையி (Lorenz's Curve), Weaver's இன் சேர்மானச் சுட்டிக் கணிப்பீடுகள், கினிக்குணகக் (Gini Coefficient) கணிப்பீடுகள், கைவர்க்கப்பரிசோதனை (The Chisquared test-x) முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவுகளாக கனகராயன் ஆற்றுவடிநிலம் தன்னகத்தே கொண்டிருக்கும் வளவாய்ப்புக்கள் இனங்காணப்பட்டுள்ளன. குறிப்பாக நிலவளம், நீர்வளம், ஏனைய வளங்கள் (மனிதவளம் கால்நடைகள், இயற்கைத்தாவரம்) இனங்காணப்பட்டுள்ளன.. அத்துடன் இவ்வடிநிலத்தில் காணப்படும் நிகழ்காலத் தடைகள் கண்டறியப்பட்டு எதிர்கால விருத்திக்கான வாய்ப்புக்கள் எவை? என்ன? என ஆராய்ந்து இன்றைய காலகட்டத்தில் இவ்வடிநிலம் சார்ந்த அபிவிருத்தி திட்டமிடுதலுக்கான புதிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. வன்னிப்பிரதேச நிலைபேண் அபிவிருத்தியை ஆற்றுவடிநிலங்களின் அபிவிருத்தியோடு இணைத்து மேற்கொள்ளப்படும் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், திட்டமிடல் செயற்பாடுகளுக்கும் இவ்ஆய்வு ஒரு வழிகாட்டி ஆய்வாகவும் அமையும்.