Abstract:
இலங்கையில் இன்று பல குடும்பங்கள் முறையான வீட்டு வசதியின்மையினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களிலேயே வசிக் கின்றனர். இலங்கையில் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பல செயற்பாடுகள் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று வீட்டுத்திட்டம் வழங்குவதாகும். கிராம அபிவிருத்தியில் வீட்டுத்திட்டம் பிரதான செல்வாக்கினை கொண்டுள்ளது. மலையகப் பகுதிகளில் பெரும்பாலான மக்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட லயன் வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். இவ்வீடுகள் மிகவும் பழைமை வாய்ந்தவை ஆகும். பல இடர்பாடுகளுக்கு மத்தியிலேயே மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய வசிப்பிட தேவையை நிறைவேற்றிக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். வசிப்பிடத் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக மலையகப்பகுதிகளில் பல இடங்களில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. இந்த ஆய்வின் நோக்கங்களாக வீட்டுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உட் கட்டமைப்பு வசதிகளை அடையாளப்படுத்தல் மற்றும் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டவர் களுக்கான வாழ்வாதாரத்தை இனங்காணல் போன்றவை காணப்படுகின்றன. ஆய்வு பிரதேசமான மத்திய மாகாண நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வடக்கு மடக்கும்புர கிராமசேவகர் பிரிவில் உள்ள மக்களிடம் நோக்க மாதிரி எடுப்பு அடிப்படையில் வீட்டுத்திட்டம் பெற்றுக் கொண்டவர்களிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டன. ஆய்விற்காக முதலாம்நிலை தரவுகள் கள அவதானம், நேர்காணல், கலந்துரையாடல், கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்து என்பன மூலம் சேகரிக்கப் பட்டன. பிரதேச செயலகத்தின் அறிக்கை, கிராம சேவகர் அறிக்கை என்பவற்றின் மூலமாக இரண்டாம்நிலை தரவுகள் சேகரிக்கப்பட்டன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகள் விபரண புள்ளிவிபரவியல் பகுப்பாய்வு முறைமைக்கு உட்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட வீட்டுத்
திட்டத்தில் மக்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக குடிநீர் வசதி போதியளவு இல்லாமை, வடிகாலமைப்பு சீராக இன்மை, மலசலகூட வசதிகள் இன்மை, வீட்டின் அறைகள் போதாமை, மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்காமை, காலநிலை மாற்றக் காலங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் வருகின்றமை, வீட்டில் காணப்படுகின்ற அறைகளுக்கான கதவு இன்மை, பொருத்தமான இடத்தில் வீடு அமையப் பெறாமை, வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான வசதிகள் இன்மை, போன்ற பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறாக அடையாளப் படுத்தப்பட்ட பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக மின்சாரம் இல்லாதவர்களுக்கு மானிய அடிப்படையில் அல்லது குறைந்த செலவில் மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், குடிநீர் தேவைகளை நிவர்த்தி செய்ய மேலதிக பொது நீர்த்தாங்கிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், மழைக்காலங்களில் நீர் வழிந்தோடக்கூடிய வகையில் வடிகாலமைப்புகளை சீர்ப்படுத்தல், போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். வீட்டுத்திட்டத்திற்கு பொறுப்பான அமைச்சர்களும் நிறுவனங்களும் தொடர்ந்து வீட்டுத்திட்டத்தினை கண்காணித்தல் வேண்டும். மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை அவதானித்து அதற்கான தீர்வினை அரச நிறுவனங்கள் நேரடியாக மேற்கொள்கின்றபோது வீட்டுத்திட்டம் வெற்றியளிக்கக்கூடிய ஒன்றாக காணப்படும்.