dc.description.abstract |
உலகின் அயனமண்டலப் பகுதிகளில் மிக முக்கிய பெருந்தோட்டப் பயிராக தேயிலை காணப்படுகின்றது. அயனமண்டலக் காலநிலைக்கு உட்பட்ட பகுதியாகக் காணப்படுகின்றமையினாலும் மண், தரைத்தோற்றம் போன்ற பொது பண்புகளுக்கு பொருத்தமான நிலப்பயன்பாடாக காணப்படுகின்றமையினாலும் இலங்கை ஆரம்ப காலத்திலிருந்தே தேயிலை உற்பத்தியில் முன்னணி நாடாக இருந்து வருகின்றது. இதனால் இலங்கை முழுவதிலும் இன்று கிட்டத்தட்ட 203,000 ஹெக்டயர் அளவில் தேயிலைப் பயிரிடப்பட்டுள்ளது. காலணித்துவ காலத்திலிருந்தே இலங்கையின் மத்திய பகுதியில் உயர்தரத்திலான தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இருப்பினும் சமீப காலமாக இத் தேயிலைத் துறை பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருவதைக் காண முடியும். அந்த வகையில் இவ் ஆய்வானது நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவில் பயிரிடப்பட்டிருந்த தேயிலைப் பயிர்ச்செய்கை நிலங்கள் காலப்போக்கில் குறைந்து சென்றுள்ளமையை ஆராய்கின்றதாக அமைந்துள்ளது. தேயிலைப் பயிர்நிலப்பரப்பின் மாற்றத்தினை அடையாளம் காணல், இவ்வாறான இழப்பிற்குச் செல்வாக்கு செலுத்தும் காரணிகளை கண்டறிதல், இவ்வாறான இழப்பு ஏற்படுத்தியுள்ள விளைவுகளை கண்டறிதல் போன்ற நோக்கங்களைக் இவ் ஆய்வு கொண்டுள்ளது. மேலும் தேயிலை பயர்ச்செய்கை நிலம் குறைவடைந்து செல்வதை இழிவளவாக்குவதற்கு சில பரிந்துரைகளும் இணைக்கப் பட்டுள்ளன. இவ் ஆய்விற்கான தரவுகளை பெற்றுக்கொள்ள முதலாம் நிலை மற்றும் இரண்டாம்நிலைத் தரவு சேகரிப்பு முறைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. அவதானிப்பு, அரை கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்து மற்றும் நேர்காணல் மூலமாக முதலாம் நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டது. இரண்டாம் நிலைத்தரவுகள் புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள், அறிக்கைகள் மற்றும் இணையத்தளங்களில் இருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. ஆய்வில் முதல் கட்டமாக படமாக்கல் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. Google Earth Pro வில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 2023 இற்கான செய்தி விம்பம் மற்றும் இலங்கையின் நில அளவைத் திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 2002 நிலப்பயன்பாட்டு படங்களினை புவியியற் தகவல் ஒழுங்கு (GIS) உதவியுடன் Digitizing செய்யப்பட்டு 2002 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான தேயிலை நில இழப்பிற்கான அளவுசார் தரவு பெற்றுக்கொள்ளப்பட்டு மேலும் முதலாம் நிலைதரவுகள் எழுமாற்று மாதிரி எடுப்பின் மூலம் சேகரிக்கப்பட்டன. அத் தரவுகள் SPSS மற்றும் MS EXCEL போன்ற மென்பொருற்கள் உதவியுடன் விபரணப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் அட்டவணைகளாகவும், வரைபுகளாகவும், விபரணங்களாக வும் பெறப்பட்டது. ஆய்வின் முடிவில் ஆய்வு பிரதேசத்தின் 2002 மற்றும் 2023ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான தேயிலை நிலப்பரப்பு மாற்றப்படங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
இதன்படி இவ் 21 ஆண்டுகளில் 1136.6 ஹெக்டயர் தேயிலை நிலப்பகுதி குறைந்துள்ளது. தேயிலை நிலம் குறைவடைந்தமைக்கு முக்கிய காரணங்களாக மக்கள் சுய தேவை, தொழிலாளர் பற்றாக்குறை, வேற்றுப் பயிர்ச்செய்கை விரிவாக்கம், பிராந்திய அபிவிருத்தி, நிர்வாகத்தின் அசமந்தப் போக்கு போன்றன முக்கிய மானிட காரணிகளாகவும் அதிகரித்த மழைவீழ்ச்சி, மண்ணரிப்பு மற்றும் மண்சரிவு போன்றன முக்கிய இயற்கை காரணிகளாகவும் கண்டறியப்பட்டன. இவ்வாறு தேயிலை பயிர்நிலம் குறைவடைந்து செல்கின்றமையினால் வேலை நாட்கள் குறைவடைதல், விளைச்சல் குறைவடைதல், வன விலங்குகளின் அச்சுறுத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு பிரதேச மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர். மேலும் தேயிலைத் தொழிலை நம்பி வாழுகின்ற மக்களின் வாழ்வாதாரத்தில் இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான விளைவுகளில் இருந்து பாதுகாப்பினைப் பெற தேயிலை நிலப்பரப்பினை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் நிறுவனத்தின் உரித்துடைமையில் காணப்படும் தேயிலைப் பயிர்செய்கையினை அரசாங்க உரித்துரிமை யாக்குவது பொருத்தமான தீர்வாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அரசாங்கம், நிறுவனம் மற்றும் மக்கள் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியமாகின்றது. |
en_US |