dc.description.abstract |
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஒன்றான இலங்கையில் பல்வேறு நோக்கம் கருதி வெளிநாடுகளுக்கு இடம்பெயரும் வீதம் தற்போது அதிகரித்து வருவதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி வேலை யின்மை பிரச்சினையை ஊக்குவித்தது. இதன் காரணமாக தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும் பொருளாதார ரீதியாக தேற்றம் அடையவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுகின்ற தேவை ஏற்பட்டுள்ளது. வருடாந்தம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோரில் மலையகப் பெண்களின் தொகையும் அதிகரித்து வருகின்றது. பொருளாதார ரீதியான பிரச்சினை, வாழ்வாதார செலவின் அதிகரிப்பு மேம்படுத்தப்பட வேண்டிய வாழ்க்கைத்தரம் என்பவற்றின் காரணமாக ஆய்வுப் பிரதேசத்திலிருந்து அதிகமானோர் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்கின்றனர். பணிப்பெண்ணாக செல்வதனால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்த போதிலும் பணிப்பெண்களாக செல்லும் பெண்களும் அவர்களின் குடும்பங்களும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வருவதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது. இவ்வாய்வின் நோக்கங்களாக பணிப் பெண்ணாக வெளிநாட்டுச் வேலைக்குச் சென்றமைக்கான காரணங்களை கண்டறிதல், பணிப்பெண்ணாக சென்றுள்ள பெண்களின் குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்களை அடையாளம் காணல், பணிப்பெண்ணாக சென்றுள்ள பெண்களின் குடும்பங்கள் எதிர் நோக்கும் சவால்களுக்கான தீர்வுகள், பரிந்துரைகளை முன்வைத்தல் என்பன முன்வைக்கப் பட்டுள்ளன. ஆய்வுப்பிரதேசமானது மத்தியமாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் யடவத்த பிரதேச செயலகத்துக்குட்பட்ட உடகமபடஹிர, அழுத்வத்த கிராமசேவகர் பிரிவுகளாகும். இப் பிரதேசங்களிலிருந்து பணிப்பெண்ணாக சென்றுள்ள பெண்களை முழுக்குடித்தொகையாகக் கொண்டு ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுக்காக கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்து, நோக்க மாதிரியெடுப்பு, நேர்காணல், கலந்துரை யாடல், நேரடி அவதானம் மூலம் முதலாம்நிலை தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் கிராமசேவகர் அலுவலக அறிக்கை மூலம் இரண்டாம்நிலை தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட தரவுகள் விபரண புள்ளிவிபரவியல் பகுப்பாய்வு மற்றும் விபரண பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுப் பிரதேசங்களிலிருந்து பணிப்பெண்ணாக சென்றமைக்கான காரணங்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் நேர்மறையான விளைவுகளை விடவும் எதிர்மறையான சவால்களை அதிகளவு எதிர்நோக்குகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாய்வில் பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வு மூலம், பெறப்பட்ட முடிவுகளின்படி குறிப்பாக கடன்சுமை, வறுமை, பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணம், குடும்ப உறவில் ஏற்படும் சிக்கல், ஆடம்பர வாழ்வு, குடும்பநலன் என்பன பெண்கள் பணிப்பெண்களாக சென்றமைக்கான காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன. மேலும், பணிப்பெண்களின் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடிகளைக் குறைத்துக்கொள்ளல், ஆளுமையுள்ள குழந்தைகள் உருவாக்கப்படுதல் போன்ற நேர் விளைவுகளையும் பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்தல், பிள்ளைகள் சொற்படி கேளாது செயற்படல், வெளிநாடு சென்ற பணிப்பெண் குடும்பங்களை கவனிக்காதுவிடல், கணவன்மார்கள் மதுபானைக்கு அடிமையாகுதல், ஆடம்பர வாழ்க்கையை விரும்புதல், பிள்ளைகள் மதுபாவனைக்கு அடிமையாதல், பிறழ்வான நடத்தைக்கு உள்ளாதல், இளவயதுத் திருமணம், சமூக வலைத்தள பாவனைக்கு அடிமையாதல், போசணைக் குறைபாடு மற்றும் உளவியல் ரீதியான மனஅழுத்த பிரச்சனைகளுக்கு உட்படுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட சவால்களுக்கான தீர்வுகளும், பரிந்துரைகளும் முன்வைக்கப் பட்டுள்ளன. தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் ஏற்படும் மறைவிளைவுகள் பற்றி முழுமையாக சிந்திக்காமல் ஆய்வுப் பிரதேசங்களிலிருந்து பெரும்பாலான பெண்கள் பணிப்பெண்களாக இடம்பெயர்கின்றனர். இவை தொடர்பான விழிப்புணர்வை வழங்குவதன் மூலமும் சுயதொழில் முயற்சிகளை உருவாக்குவதன் மூலமும் இப் பெண்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளிடம் மறைந்திருக்கும் ஆளுமை, தன்னம்பிக்கை, துணிவு, மனவுறுதி என்பவற்றை வெளிக்கொணரும் வகையில் பயிற்சிப்பட்டறைகள், கருத்தமர்வுகள் நடாத்தி வலுவுள்ளவர்களாக மாற்றுவதன் மூலம் அவர்களின் உளப்பாதிப்புகளைக் குறைப்பதோடு புதிய தொழில் முயற்சிகளை உருவாக்கும் ஆளுமைப்பண்பும் தானாகவே ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உருவாகும். |
en_US |