Abstract:
அகராதிகளின் முக்கியத்துவம் பற்றி இன்று பேசப்படுவதற்குக் காரணம் அவற்றின் சொல் வளங்களும் பொருள் பயன்பாடுகளுமேயாகும். அவ்வகையில் தமிழ் என்பதனைப் பிராந்திய அடிப்படையில் நோக்கும் போது இந்தியத் தமிழ் இலங்கைத் தமிழ் வேறுபாடே முதலில் உணரப்படுகிறது. அகராதிகளின் காலம் முதல் இன்று வரை இலங்கைச் சொற்களின் பதிவுகள் தொடர்ந்து பெருகிக் கொண்டே வருகின்றன. எனவே அவற்றின் நிலைபேறாக்கம் எந்தளவுக்கு அகராதிகளில் காணப்படுகிறதோ, அதேயளவுக்கு காலம் மாற மாற ஊடாட்டம் என்ற நிலையை அடைந்து வருவதனையும், இவ்வாய்வின் மூலம் நிலை நாட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். சென்னைப் பல்கலைக்கழக அகராதிகளின் ஏழு தொகுதிகளும், கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதிகளும் பல ஆயிரக்கணக்காண சொற்களைத் தம்மிடையே கொண்டிருந்தாலும், அவற்றின் நிலைபேற்றை பல சூழலியல் அம்சங்கள், புறக்காரணிகள், வரலாற்று அம்சங்கள், பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு, வட்டார வழக்கு என பல்வேறு காரணிகள் நிர்ணயிக்கின்றன. இதே போன்றே அகராதிகள் யாவற்றிலும் காணப்படும். இலங்கைச் சொற்கள் கூட அதன் ஊடாட்ட நிலையை பல காரணங்களால் முன்வைக்கின்றன. இவ்வாய்விற்கான முதன்மை ஆதாரங்களாக சென்னைப் பல்கலைக்கழக அகராதி (Tamil lexicon) க்ரியாவின் தற்காலத்தழிழ் அகராதி, வின்ஸ்லோ அகராதி உள்ளிட்ட வேறு சில அகராதிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற் கூறிய தமிழ்ப் பேரகராதியின் எல்லாத் தொகுதிகளிலும் அவற்றுக்கான துணைத் தொகுதியிலும் இலங்கை வழக்கு எனக் குறிப்பிட்ட சொற்களையும், சொற்பொருள்களையும் ஆராயுமிடத்து அவற்றை மீண்டும் ஒருமுறை மீள்பார்வை செய்யவேண்டிய தேவை ஏற்படுகின்றது. ஏனெனில் இங்கு தரப்பட்டுள்ள சொற்களில் பெரும்பாலானவை வழக்கில் உள்ளவை. அதுமட்டுமின்றி பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு இரண்டுக்கும் பொதுவான சொற்களையும் இங்கு காணக்கூடியதாக இருக்கிறது. இப்பொதுச் சொற்கள் பெரும்பாலும் இலங்கையில் அனைவரது வழக்கிலும் உள்ளன எனலாம். ஆயினும் வாழ்க்கையிலும், சமுதாயத்திலும் ஏற்பட்டு வரும் பெரும் மாற்றங்கள் காரணமாக இச்சொற்களுக்கு பல விரைவில் வழக்கொழிந்துவிடும் வாய்ப்பும் உண்டு. இளந்தலைமுறையினின் பேச்சு வழக்கில் எத்தனையோ சொற்கள் இடம்பெறுவது இல்லை. அவர்கள் இச்சொற்களையோ சொற்பொருள்களையோ அறியார். அவ்வகையில் இவ்விரண்டு கருத்தாக்கங்களும் அதாவது நிலைபேறாக்கம், ஊடாட்டம் என்பன இந்த ஆய்வின் மூலம் எவ்வாறு தெளிவுபடுத்தப் படுகின்றன என்று நோக்கலாம்.