Abstract:
பண்டையகால வரலாற்றை அறிய உதவும் தொல்லியல் சான்றுகளில் சாசனங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது. காலத்திற்கு காலம் எழுத்துப் பொறிக்கப் பட்ட கல்வெட்டுக்கள், நாணயங்கள், உலோக ஏடுகள், மட்பாண்டங்கள், முத்திரைகள் என்பன சாசனம் எனப்படுகின்றது. இலங்கையில் இடம்பெற்ற பல ஆய்வுகளில் பல சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும் பொழுது யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சாசனங்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றது. இச்சாசனங்கள் தமிழ், சிங்களம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் பிராமி, தமிழ், சிங்களம், பிராகிருதம் ஆகிய வரிவடிவங்களிலும் காணப்படுகின்றது. இச்சாசனங்களை அடிப்படையாகக்கொண்டு இவ் ஆய்வானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. மொழி காலம்தோறும் மாறும் இயல்புடையது. தமிழ் மொழி தொன்மையான வரலாற்றினைக்கொண்ட மொழிகளில் ஒன்று. காலத்திற்கேற்ப பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. ஒலிகளின் தன்மைக்கேற்பவும் சூழலிற்கேற்பவும் மொழித் தொடர்பு காரணமாகவும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இம்மொழிமாற்றங்கள் மொழிக்கூறுகளான ஒலி, ஒலியன், உருபன், சொல், தொடர், பொருள் அடிப்படையில் ஏற்படுகின்றமையை ஆராயமுடிகின்றது. அதனடிப்படையில் இவ் ஆய்வின் ஆய்வுத்தளமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படும் தொல்சாசனங்களை எல்லையாகக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ் மொழியின் தொன்மை, வளர்ச்சி, அதனூடாக ஏற்பட்ட மொழி மாற்றங்களையும் தற்போது தமிழ் மொழியிலிலுள்ள புதுமையாக்களையும், நிலைபேறு வழக்குககளையும் அறிந்து கொள்வதை இவ்வாய்வானது நோக்கமாகக்கொண்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்தில் இவ்வாறானதோர் ஆய்வு இடம்பெறவில்லை என்ற அடிப்படையில் ஆய்வு இடைவெளியை குறைநிரப்புவதில் இவ் ஆய்வு முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே வரலாற்றடிப்படையில் தமிழ் மொழி மாற்றம் விபரண ஆய்வு முறைக்கு அமைவாக கட்டமைக்கப்பட்டுள்ளதோடு களஆய்வு மூலம் பெறப்பட்ட தரவுகள் உள்ளடக்கப் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு இவ்வாய்வானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. சாசனங்கள் பல இயற்கை மற்றும் மனித செயற்பாடு காரணமாக அழிவடைந்தும் பகுதி சிதைந்தும் காணப்படுவதால் பெரும்பாலான எழுத்துக்கள் அழிவடைந்த நிலையிலும் சில சொற்கள் தெளிவின்யுைம் மேலும் இன்று மீள் வாசிப்பிற்கு உட்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் சாசனங்களில் பல காணாமல் போயுள்ளமையும் இவ் ஆய்வின் பிரச்சினையாக அமைந்துள்ளதோடு தொல்லியல் சான்றுகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாமையும் இன்று காணப்படும் சாசனங்களை பாதுகாக்கும் எண்ணமும் அவர்களிடம் இல்லாமல் போனமையும் இவ் ஆய்வவின் முக்கிய பிரச்சினையாக அமைந்துள்ளது. இவ் ஆய்வானது தமிழ் மொழியில் புதிய எழுத்துருவாக்கம் தோன்றுவதற்கு காரணமாக அமையும் என்பதோடு ஒலி, உருபன்,
சொல், தொடர்,பொருள் என்பவற்றிற்கிடையே மாற்றம் தோன்றவும் காரணமாக அமையும். எனவே இவ்வாய்வானது நேர்காணல், கலந்துரையாடல், கள ஆய்வின் மூலம் பெறப்படும் தகவல் ஒலி, ஒளி பதிவுகள் என்பவற்றை முதல்நிலைத் தரவுகளாகக் கொண்டும், இவ் ஆய்வுடன் சம்பந்தப்பட்ட நூல்கள், இதழ்கள், கட்டுரைகள், ஆய்வேடுகள், மாநாட்டு மலர்கள், சஞ்சிகைகள், இணையத்தகவல்கள், பத்திரிகைள் என்பவற்றை துணை மூலங்களாக கொண்டும் இவ் ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே இவ் ஆய்வின் மூலம் தமிழ் மொழியின் வரலாற்றினை ஆவணப்படுத்துவதுடன் ஒலி,ஒலியன், உருபன், தொடர், பொருள் என்பவற்றிற்கிடையில் இடம்பெற்றுள்ள மொழி மாற்றங்களை இனங்கண்டு தமிழ் மொழியிலுள்ள புதுமையாக்க நிலைபேறு வழக்குகளையும் ஆராயமுடிந்துள்ளது.