Abstract:
மொழியும் பண்பாடும் ஒன்றுக்கொன்று நெருக்கமான உறவினைக் கொண்டுள்ளன. மொழியானது சமுதாயத்தைப் படம்பிடிக்கும் கருவி என்கின்றனர் மொழியியலாளர்கள். சமுதாயத்தின் பல்வேறு விடயங்களை மொழியினூடாகவே நாம் அறிந்து கொள்கின்றோம். மொழியின் கூறுகளில் ஒன்றான உருபனியலானது (Morphology) மொழியின் இலக்கணரீதியான அம்சத்தை ஆராய்கின்றது. உருபனியலானது பெயர் உருபனியல் (Noun Morphology) வினை உருபனியல் (Verb Morphology) என இரண்டு பிரிவைக் கொண்டிருப்பதுடன் காலங்கள் (Tenses) வினை உருபனியல் வகைப்பாட்டிற்குள் அடங்குகின்றது. தமிழ்மொழியானது எழுத்து வழக்கு (Written Variety) பேச்சு வழக்கு (Spoken Variety) என இரு வழக்கைக் கொண்டு காணப்படுவதுடன் எழுத்து வழக்கில் இறந்தகாலம் (Past tense) நிகழ்காலம் (Present tense) எதிர்காலம் (Future tense) என முக்காலங்கள் உண்டு. பேச்சு வழக்கிலும் இவ் வகைப்பாடுகள் காணப்பட்டாலும் இரு வழக்கிலும் காலங்களின் அமைப்பு மிக வேறுபட்டு அமைகின்றது. யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் நிகழ்கால அமைப்பு எவ்வாறு அமைந்துள்ளது. அதன் நுட்பமான அம்சங்களினை வெளிக்கொணர்வதே இவ் ஆய்வின் நோக்கமாகும். காலங்கள் தொடர்பாக இலக்கண ரீதியான வரையறைகள் காணப்பட்டாலும் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் தொடர்பாடலின் போது சந்தர்ப்பசூழ்நிலைக்கு ஏற்ப காலங்களின் பயன்பாட்டில் முரணான சில அம்சங்களை அவதானிக்கமுடிகிறது. இவ் ஆய்வானது விபரண முறையியல் (Descriptive Methodology) ஆய்வாக விளங்குவதுடன் ஆய்வின் நோக்கத்தினை அடையும் வகையில் முதல்நிலைத்தரவுகளாக அவதானிப்பு முறை (Observation Method), நேர்காணல்முறை (Interview Method) கலந்துரையாடல் (Discussion Method)என்பன பயன்படுத்தப்படுகின்றன. இரண்டாம் நிலைத்தரவுகளாக ஆய்வோடு தொடர்புடைய நூல்கள், சஞ்சிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் என்பன காணப்படுகின்றன. ஆய்வுக்குரிய பிரதேசமாக யாழ்ப்பாணப் பிரதேசம் கொள்ளப்படுகின்றது.