Abstract:
ஒவ்வொரு நாட்டினதும் வரலாறு பற்றிய ஆய்வில் ஆரம்பத்தில் கட்டுக்கதைகளும், ஐதீகங்களும் தான் அந்நாட்டினது உண்மையான வரலாறாகப் பேணப்பட்டு வந்துள்ளன. இவை வரலாறு அல்லாதவிடத்தும் வரலாற்றைக் கட்டியெழுப்ப உதவும் மூலாதாரங்களாக உள்ளன. யாழ்ப்பாணம், யாழ்ப்பாணப்பட்டினம், யாழ்ப்பாணத்தேசம் எனப் பலவாறு அழைக்கப்படும் பிராந்தியம் வரலாற்றுத் தொன்மையும், பாரம்பரிய பண்பாட்டம்சங்களையும் கொண்டமைந்த இலங்கையின் தனித்துவப் பிராந்தியமாகும். இதன் வரலாற்றை ஓரளவுக்கு அறியத்தருகின்ற வட இலங்கை தமிழிலக்கிய மூலாதாரங்களான கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாணவைபமாலை போன்றன யாழ்ப்பாணம் என்ற இடப்பெயர் உருவாகியதற்கான கதையாக யாழ்பாடிக் கதையைக் குறிப்பிட்டுள்ளன. இந்நூல்களை மையமாகக் கொண்டு யாழ்பாடி கதையை புனைகதை, ஐதீகம் எனச் சில அறிஞர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்தின் தொன்மையான வரலாற்றில் இவ்விடப்பெயர் குறித்து தோற்றம் பெற்ற யாழ்பாடிக் கதையின் வகிபாகத்தை எடுத்துக்காட்டுதல், யாழ்பாடிக் கதையில் வரும் வரலாற்றுச் சம்பவங்களை ஏனைய சான்றாதாரங்களுடன் ஒப்பிட்டு கதையின் உண்மைத்தன்மையை மீளாய்வு செய்தல் என்பன இவ்வாய்வின் நோக்கங்களாக உள்ளன. இவ்வாய்வானது முதலாந்தர மூலாதாரங்களாக வையாபாடல், கைலாயமாலை, யாழ்ப்பாண வைபமாலை, தமிழக இலக்கியங்கள், சிங்கள இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள், ஆகியவற்றையும், இரண்டாந்தர மூலாதாரங்களாக யாழ்ப்பாணம் எனும் இடப்பெயர், அரச உருவாக்கம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர்களது நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள் என்பவற்றைக் கொண்டு ஒப்பிட்டு வரலாற்று அணுகுமுறையோடு ஆய்வு செய்துள்ளது. யாழ்பாடிக் கதை தொடர்பாக யாழ்ப்பாண வைபவமாலை, சோழராட்சியிலிருந்து இரண்டு கண்ணுங் குருடனாகிய கவி வீரராகவன் எனும் யாழ்பாணன் செங்கடகல நகரில் இருந்த வாலசிங்கமகராசனைப் போற்றிப்பாடி பரிசாகப் பெற்ற மணற்திடலுக்கு யாழ்ப்பாணம் எனும் பெயரிட்டு வடதிசையில் இருந்த சில தமிழ்க்குடிகளை அழைப்பித்து குடியேற்றி இவ்விடத்தில் இருந்த சிங்களவர்களையும் ஆண்டு முதிர்வயதுள்ளவனாய் இறந்து போனான் எனக் குறிப்பிட்டுள்ளது. கைலாயமாலை உக்கிரசிங்கனின் மகனாகிய நரசிங்கராசனைப் பாடியே யாழ்பாடி யாழ்ப்பாணத்தை பரிசிலாகப் பெற்று இறந்து போனான் எனக் குறிப்பிடுகிறது. ஆனால் வையாபாடல், விபீஷணனின் அவையில் யாழை வாசிப்பவனாகிய யாழ்பாடி தனக்கு கிடைத்த மணற்றியை ஆள்வதற்கு கோளறுகரத்துக் குரிசிலையை அழைத்துவந்து பட்டஞ்சூட்டி இவ்விடத்திற்கு யாழ்ப்பாணம் எனப் பெயரிட்டான் எனக் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை தமிழக இலக்கியக் குறிப்புக்கள் தமிழரின் இசைக்கருவியாகக் கருதப்படும் யாழ் என்னும் கருவியை மீட்கும் மக்கள் யாழ்ப்பாணர் குறிக்கப்பட்டு, நாளடைவில் அவர்கள் வாழ்ந்த பகுதி யாழ்ப்பாணம் என அழைக்கப்படலாயிற்று என்பதை வெளிப்படுத்தியுள்ளன. இவ்வாறு யாழ்பாடி பற்றிய செய்திகள் கால வரன்முறையற்ற நிலையில் பலவாறு தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாயினும், இக்கதையினூடாக யாழ்பாடி கதை என்பது தனியே இடப்பெயரை எடுத்துரைக்கும் கதையல்ல என்பதும், தமிழகத்தில் இருந்து ஈழம் நோக்கி இடம்பெற்ற மக்கள் குடியேற்றம், அரசியலாதிக்கம், இப்பகுதியில் தமிழ் மக்களோடு சிங்கள இனமக்களும் வாழ்ந்திருந்தனர்