Abstract:
இலங்கையில் பல இனப்பண்பாடுகள் கொண்ட மக்கள் வாழ்ந்து வருகின்ற போதும் தொன்மையான, தொடர்ச்சியான வரலாற்றினைக் கொண்ட மக்களாக
தமிழ் - சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் விஜயன் வழிவந்த சிங்கள் மக்களே இலங்கையின் பூர்வீக மக்கள் எனவும் அவர்களுடனே இலங்கையின் மனித வரலாறும், நாகரிக வரலாறும் தோன்றியது எனவும் தமிழர்கள் கி.பி 13ஆம் நூற்றாண்டுக்கு பின்னரே இலங்கையின் சில பிராந்தியங்களில் நிலையான குடியிருப்புக்களைக் கொண்டிருந்தனர் எனவும் வரலாற்று அறிஞர்களில் ஒரு பிரிவினர் தற்காலம் வரை கூறிவருகின்றனர். ஆனால் வரலாற்றுத் தொடக்க காலத்திலிருந்தே தமிழர்கள் இலங்கையில் பரந்துபட்டு வாழ்ந்து வந்ததோடு அவர்கள் சிங்கள மக்களைப் போன்று அரசியல், நிர்வாக, படை, வர்த்தக, சமய, கலை முதலான நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் இனம், மதம், மொழி கடந்த
நிலையில் தமிழ் - சிங்கள மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதனால் கி.பி 13ஆம் நூற்றாண்டு வரையான இலங்கை வரலாற்றில் கணிசமான தமிழ் அதிகாரிகள் சிங்கள அரசில் சமபங்கெடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு இணைந்து பங்காற்றி இருந்தனர் என்பதை இலக்கிய, தொல்லியல் சான்றுகளின் துணைகொண்டு எடுத்துக்காட்டுவதே இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வு தொடர்பாக இலக்கியங்கள் தரும் தகவல்களும் அவற்றை அடிப்படையாகக் கொண்டெழுந்த இரண்டாந்தர ஆய்வுகள் மற்றும் தொல்லியற் ஆதாரங்களையும், வரலாற்றுத் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு வரலாற்று அணுகுமுறையோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வின் ஊடாக அரசியல் ஆள்புலப் போட்டிகள் தவிர்ந்த ஏனைய காலங்களில் தமிழர் குறித்து பகைமையான போக்கை சிங்கள அரசர்கள் கொண்டிருக்கவில்லை என்பதையும் இரு இனங்களுக்கும் இடையில் பரஸ்பரம் சிறந்த உறவுநிலை பேணப்பட்டு வந்துள்ளது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.