Abstract:
இவ்வாய்வானது பின்நவீனத்துவ சிந்தனையாளரான டெரிடாவின் கட்டவிழ்ப்புவாத சிந்தனைகள் பழந்ததமிழ் மரபியல் சார்ந்த நாடகக் கலைரயான கூத்துக்கலையில் பிரதிபலித்துக் காணப்படுகின்றதா? ஏன்பதனையும் மற்றும் இச்சிந்தனை கூத்துக்கலைக்கு அவசியமானதா? என்பதனையும் பகுப்பாய்வு செய்வதாக அமைகிறது. ஏற்கனவே அனைவராலும் பழக்கப்பட்ட, நியமிக்கப்பட்ட மரபு வழியான சிந்தனைனகளிலிருந்து விடுபட்டு புதிய கருத்தாக்கம் நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு சிந்தனையாக மரபாக டெரிடாவின் கட்டவிழ்ப்பு சிந்தனை அமைகிறது. இக் கட்டவிழ்ப்பு வாதமானது பெருங்கதையாடல்களை நிராகரித்தல், வாசகனை முதன்மைப்படுத்திய சிந்தனை, இரட்டை எதிர்நிலைகளினை நிராகரிக்கின்ற போக்கு, சிளிம்பு நிலைக் கருத்துக்கள் மீது கவனம் செலுத்துதல், குறிப்பானுக்கும் குறிப்பீட்டுக்குமான உறவு மாறக்கூடிய தன்மை, மீள்வாசிப்பிற்கு உட்படுத்தல், பாரம்பரியத்தினை சிதைவாக்கல் போன்ற பண்புகளைக் கொண்டதாக விளங்குகின்றது. கூத்துக்கலையானது பாரம்பரியமாக அதனுடைய ஒவ்வொரு அம்சங்ளிலும் பல்வேறு கட்டுக்களைக் கொண்டதாக காணப்படுகின்றது. குறிப்பாக அரங்க அமைப்பு, ஆடை அணிகலன்கள், ஒப்பனை, ஒளியமைப்பு, ஆட்டமுறை, ஆயுதங்கள் போன்ற கூத்தின் ஒவ்வொரு அம்சமும் இத்தகையக் கட்டுக்களைக் கொண்டிருந்தன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் கூத்தினுடைய போக்கினை, அது தொடர்பான கூத்துக் கலைஞர்களுடைய நிலைப்பாட்டினையும் பகுப்பாய்வுக்கு உட்படுத்துகின்ற போது கூத்தினுடைய ஒவ்வொரு கூறுகளும் கட்டவிழ்ப்பினுடைய பண்புகளை உள்வாங்கியிருப்பதை கண்டுகொள்ளலாம்;;;;;;;;. இதனை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வு அமைகின்றது. எனவே இன்றைய காலகட்டத்தில் மருவிவரும் கலைகளில் ஒன்றான கூத்துக்கலை கட்டவிழ்ப்பினுள் உள்வாங்கப்பட்டுள்ள தன்மையை, மீள்வாசிப்பு செய்யப்பட்டுள்ளமையும் மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தின் நாட்டுக்கூத்தை ஆதாரமாகக் கொண்டு விளக்குவதாக இவ் ஆய்வு அமைகின்றது. இவ்வாய்விற்கான தரவுகளாக முதலாம நிலைத் தரவுகள், இரண்டாம் நிலைத் தரவு என்பன சேகரிக்கப்பட்டன. அந்த அடிப்படையில் முதலாம் நிலைத் தரவுகள் மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தின் சில கூத்துக்கலைஞர்களின் நேர்காணல் வாயிலாகவும், இரண்டாம் நிலைத் தரவுகள் பின்நவீனத்துவத்தில் கட்டவிழ்ப்பு சிந்தனை மற்றும் நாடக அரங்கியல் தொடர்பான நூல்கள், சஞ்சிகைகள், ஆய்வேடுகள் வாயிலாகவும் சேகரிக்கப்பட்டன. மேலும் இவ் ஆய்வில் பகுப்பாய்வு முறை, விபரண முறை, வரலாற்று முறை, ஒப்பிட்டாய்வு முறை போன்ற முறை பயன்படுத்தப்பட்டுள்ளன.